வட மாநிலங்களில் மழை, வெள்ளத்துக்கு 100 பேர் பலி
தென்மேற்கு பருவ மழை வட மாநிலங்களில் தீவிரம் அடைந்து உள்ளது.
உத்தரபிரதேசம், பீகார், இமாசலபிரதேசம், உத்தரகாண்ட், டெல்லி, அரியானா, மராட்டியம் உள்ளிட்ட வட மாநிலங்களிலும், அசாம், மேகாலயா உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களிலும் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
உத்தரபிரதேசத்தில் கங்கை, சாரதா, ரப்தி உள்ளிட்ட நதிகளில் அபாய அளவை தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆறுகளின் கரையோரம் உள்ள பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது.
இதேபோல் பீகாரிலும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அந்த மாநிலத்தில் 12 மாவட்டங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு இருக்கின்றன. இதனால் 27½ லட்சம் மக்கள் மழை-வெள்ளத்தில் சிக்கி தவிக்கிறார்கள். 2 லட்சத்து 96 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். 3 லட்சத்து 39 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளன.
உத்தரகாண்ட் மாநிலம் ருத்ரபிரயாக்கில் மழையின் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 5 பக்தர்கள் காயம் அடைந்தனர்.
அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்ரா நதியில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அங்குள்ள காஜிரங்கா தேசிய வனவிலங்கு பூங்கா வெள்ளத்தில் மிதக்கிறது.
பீகார், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேசிய பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு உள்ளனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர்.
கடந்த 2 நாட்களில் மட்டும் வட மாநிலங்களில் மழை வெள்ளத்தில் சிக்கியும், கட்டிடம் இடிந்து விழுந்தும், மின்னல் தாக்கியும் சுமார் 100 பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக ஒடிசாவில் 32 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் 29 பேர் மழையின் போது மின்னல் தாக்கி இறந்தவர்கள் ஆவார்கள். அசாம் மாநிலத்தில் 29 பேரும், பீகாரில் 26 பேரும் பலியாகி இருக்கிறார்கள்.
-அமுதவன்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.