ஹரித்துவார் கங்கைக்கரையில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை 26-ந்தேதி திறப்பு: தருண்விஜய் எம்.பி. தகவல்
இதுகுறித்து டெல்லியில் பேட்டியளித்த தருண் விஜய் எம்.பி. கூறியதாவது:-
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் கும்பமேளா நடைபெறும் கங்கைக்கரையில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை 26-ந்தேதி திறக்கப்படுகிறது. சிலையை உத்தரகாண்ட் முதல்-மந்திரி ஹரிஷ் ராவத் திறந்து வைக்கிறார். விழாவில் பல மாநில முதல்-மந்திரிகளும், கவர்னர்களும் கலந்து கொள்வார்கள்.
இதற்காக புதுவை, கேரளா, பீகார், மேற்கு வங்காளம், மேகாலயா, அரியானா, மராட்டியம் ஆகிய மாநிலங்களின் கவர்னர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். தமிழக கவர்னரும் கலந்துகொள்வதாக உறுதியளித்துள்ளார். மத்திய மந்திரிகள் வெங்கய்யா நாயுடு, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோரும் கலந்து கொள்வார்கள்.
இது தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா, எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் மற்றும் அனைத்து கட்சியினருக்கும் அழைப்பு விடுக்க விரைவில் சென்னை செல்கிறேன். 18-ந் தேதி கன்னியாகுமரியில் கங்கை திருவள்ளுவர் பயணம் தொடங்குகிறது.
சுமார் 30 லட்சம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் இந்த சிலைக்கு எனது எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.20 லட்சம் வழங்கி உள்ளேன். இதற்கு உறுதுணையாக இருந்த பிரதமர் நரேந்திரமோடி, பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
தமிழக முதல்வர் தன்னுடைய கட்சி எம்.பி.க்களுக்கு இந்த திட்டத்துக்கு ஆதரவு தருமாறு அன்புக்கட்டளை இட்டுள்ளார். அவருடைய உதவிக்கு என்றென்றும் கடமைப்பட்டுள்ளோம். திருவள்ளுவர் சிலை முதன்முறையாக கங்கை கரையில் நிறுவப்படுகிறது.
இவ்வாறு தருண் விஜய் எம்.பி, கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.