ஏ.ஆர்.ரகுமான் தயாரிக்கும் படம் ‘99 சாங்ஸ்.’ இசையமைத்து தயாரிப்பதுடன் கதையையும் அவரே எழுதுகிறார்.
தனது தயாரிப்பான ’99 சாங்க்ஸ்’, நான்கு வருட உழைப்புக்குப் பிறகு படமாக உருவாக்கப்பட உள்ளதாகவும் அது காஷ்மீர் இளைஞரைக் கதாநாயகனாகக் கொண்ட இந்தி படமாகவும் இருக்கும் என்றும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
’99 சாங்க்ஸ்’ குறித்துத் தான் இசையமைத்திருக்கும் ‘பீலே’ பட ட்ரெய்லர் வெளியீட்டில் ரஹ்மான் பேசினார்.
”நான் ’99 சாங்க்ஸ்’ படத்தின் ஆரம்ப கட்டத் தயாரிப்புகளில் இருக்கிறேன். நான்கு வருட உழைப்புக்குப் பிறகு இது சாத்தியமாகி இருக்கிறது. அனேகமாக இன்னும் ஒரு மாதத்தில் அதற்கான புரோமோ வெளியிடப்படும். அதற்கான படப்பிடிப்பு இப்போது நடைபெற்று வருகிறது.
இது ஓர் இந்தியப் படம். இறைவனும், மக்களும் படத்தின் விதியை முடிவு செய்வார்கள். இந்த இந்திப் படத்தில் காஷ்மீரி இளைஞன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகி குறித்து பின்னர் சொல்கிறேன்.
ஆல்பங்கள் பற்றிய திட்டங்கள் குறித்து எல்லோரும் என்னிடம் கேட்கிறார்கள். என்னுடைய கடைசி ஆல்பமான ”ரௌனக்”, இரண்டு வருடங்களுக்கு முன்னால் வெளியானது. மற்றவர்களின் படங்களுக்கான இசையை முடித்துக் கொடுக்க வேண்டும் என்பதால் என்னுடைய ஆல்பத்துக்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இனிமேல் என் ஆல்பம் தொடர்ந்து வெளியாகும் என்று நினைக்கிறேன்.
முதலில் நான் இசையை ரசிப்பவன். அப்படித்தான் எப்போதும் இருக்க ஆசைப்படுகிறேன். எல்லோருமே, 90களின் இசையைப் போல திரும்பத் தரமுடியுமா என்று கேட்கிறார்கள். அந்த காலகட்டம் ஒரு கலைஞனாக, நான் உள்ளார்ந்து செயல்பட்ட தருணம். எப்போதும் என்னை நான் திருப்தி செய்துகொள்ள முயல்கிறேன். அதைத்தான் தொடர்ந்து செய்துவருகிறேன்” என்றார்.
ரஹ்மானின் ஒய்.எம். மூவிஸ், படத்தைத் தயாரிக்க, விஸ்வேஷ் கிருஷ்ணமூர்த்தி இயக்கும் ’99 சாங்க்ஸ்’ படத்தின் கதையை ரஹ்மான் எழுதியிருக்கிறார். பியானோ மற்றும் இதயங்களைக் கொண்ட பின்னணியில், ஒரு ஜோடி காற்றில் மிதந்துகொண்டிருப்பது மாதிரியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், இரண்டு மாதங்களுக்கு முன்பே வெளியானது.
ரஹ்மான், தற்போது மணிரத்னத்தின் அடுத்த படத்துக்கும், ஷங்கரின் ‘எந்திரன் 2’ படத்துக்கும் இசையமைத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.