தலைமறைவாக இருந்த பீகார் எம்.எல்.சி. மனோரமா கோர்ட்டில் சரண்டைந்தார்.
பீகார் மாநில எம்.எல்.சி.யும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவருமான மனோரமா தேவியின் மகன் ராக்கி யாதவ்(30). இவர் கடந்த ஏழாம்தேதி இரவு கயா நகரில் மத்திய சிறைச்சாலைக்கு அருகே தனது தாயாரின் விலையுயர்ந்த சொகுசு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் வந்த மற்றொரு சிறிய கார் ராக்கி யாதவின் காரை முந்திச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த ராக்கி யாதவ், அந்த காரை விரட்டிச்சென்று, வழிமறித்து காரை ஓட்டி வந்த ஆதித்யா சச்தேவா(19) என்ற இளைஞரை துப்பாக்கியால் சுட்டார். இதில் அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராக்கி யாதவை கைது செய்ய நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அதற்குள் அவர் தலைமறைவாகி விட்டார். இது தொடர்பாக ராக்கி யாதவின் தந்தை பிந்தி யாதவை கைது செய்த போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, 14 நாள் விசாரணை காவலில் சிறையில் அடைத்தனர்.
தலைமறைவாக இருந்த ராக்கி யாதவை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையிலான தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையில், இந்த கொலை வழக்கில் உடனடி நடவடிக்கை கோரி பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள், மாணவர்கள் அமைப்பை சேர்ந்தவர்கள், மற்றும் பொதுமக்களும் கயா நகரில் கடையடைப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வந்தனர். தலைமறைவாக இருந்த ராக்கி யாதவை கடந்த பத்தாம் தேதி அதிகாலை போலீசார் கைது செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் விசாரணைக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்துவந்த ராக்கி யாதவை தேடி அவரது வீட்டுக்கு சென்றபோது பூரண மதுவிலக்கு அமலில் உள்ள மாநிலமான பீகார் சட்டசபை மேலவையில் எம்.எல்.சி.யாக பதவி வகிக்கும் மனோரமா தேவியின் வீட்டில் ஏராளமான வெளிநாட்டு மதுபாட்டில்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.
பீகார் மாநில மதுவிலக்கு, கலால் மற்றும் ஆயத்தீர்வை அதிகாரிகள் அவர் மீது நடவடிக்கை எடுக்க தயாரானபோது மனோரமா திடீரென தலைமறைவானார். இதையடுத்து, தலைமறைவு குற்றவாளியான அவரை கைது செய்யுமாறு கோர்ட் உத்தரவிட்டது. இந்த உத்தரவையடுத்து, பீகார் ஐகோர்ட்டில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவின்மீது வரும் 19-ம் தேதி விசாரணை நடத்தப்படும் என கோர்ட் அறிவித்தது.
இதையடுத்து, இன்று அதிகாலை மனோரமா தேவி கயா கோர்ட்டில் ஆஜரானார். அவரை 14 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.