ஓ.பன்னீர்செல்வத்தை கட்சியில் இணைப்பதை சசிகலாதான் முடிவு செய்வார்: தம்பிதுரை
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைப்பது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் சசிகலாதான் முடிவு செய்ய முடியும் என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்தார்.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ‘நீடித்த வளர்ச்சிக்கான இலக்கு’ என்ற தலைப்பில் தெற்காசிய நாடுகளின் நாடாளுமன்றத் தலைவர்கள் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்ற தம்பிதுரை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
’’தமிழகத்தில் தற்போது நிலையான ஆட்சி அமைந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தொடங்கிய திட்டங்களை வரும் நான்கரை ஆண்டுகளில் தமிழக அரசு அமல்படுத்த உள்ளது. இந்த கால கட்டத்தில் ஜெயலலிதாவின் கனவுகளை நனவாக்கும் வகையில் தமிழகம் வளர்ச்சியை எட்டும்.
அதிமுகவைச் சேர்ந்தவர்கள் ஒற்றுமையாகத்தான் உள்ளனர். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துடன் 10 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். சட்டப்பேரவை நடவடிக்கைகளை முடக்கும் நோக்கில் திமுகவினர் திட்டமிட்டு அமளியில் ஈடுபட்டனர். அதற்கு ஓ.பன்னீர்செல்வமும் ஒத்துழைத்துள்ளார். அவர்கள் குடியரசுத் தலைவர் ஆட்சி தமிழகத்தில் அமலாக வேண்டும் என நினைக்கின்றனர்” என்றார்.
பின்னர், ஓ.பன்னீர்செல்வத்தை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்வீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு, ”ஓ.பன்னீர்செல்வம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். அவரை கட்சியில் சேர்த்து கொள்வது குறித்து சசிகலாதான் முடிவு செய்ய முடியும். அவர் என்ன முடிவு செய்கிறாரோ அதை நாங்கள் ஏற்றுக்கொள்வோம்” என்றார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.