ஜெயலலிதா வழக்கில் உயர்நீதி மன்றத் தவறுகளைப் பட்டியலிட்டார் ஆச்சார்யா. இறுதிக் கட்டத்துக்கு வந்தது அவரது வாதம்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா இறுதி வாதத்தை தொடர்ந்தார். அப்போது, “ஜெயலலிதாவுக்கு சொந்தமான 17 கட்டிடங்களின் மதிப்பு ரூ.24 கோடி என நீதிபதி குன்ஹா உறுதி செய்துள்ளார். ஆனால் கர்நாடக உயர் நீதிமன்றம் ரூ. 5 கோடி என குறைத்து மதிப்பீடு செய்துள்ளது. இதேபோல ஜெய லலிதா தனது வருமானத்தை சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகி யோரை பினாமியாக மாற்றி, 52 தனியார் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். இந்த நிறுவனங் களுக்காக ஜெயலலிதா தனது வங்கி கணக்கில் இருந்து 330 முறை பணபரிமாற்றம் செய்துள்ளார். 1991-96 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாக ரூ. 66.65 கோடி சொத்துக்குவித்ததை பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. ஆனால் கர்நாடக உயர் நீதிமன்றம் இதை கருத்தில் கொள்ளாமல் தீர்ப்பு வழங்கியுள்ளது. எனவே கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்”என்றார்.
இதையடுத்து நீதிபதி பினாகி சந்திரகோஷ், “1991-96 காலகட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின் மொத்த வருமானம் என்ன? நால்வரின் அசையும் மற்றும் அசையா சொத்துகள் என்னென்ன? இந்த சொத்துக்களின் மதிப்பு தொடர்பாக பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், கர்நாடக உயர் நீதிமன்றம் என்ன முடிவுகளை எடுத்தன போன்ற விவரங்களை தாக்கல் செய்யுங்கள்”என கர்நாடக அரசின் வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு உத்தரவிட்டார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.