யார் வந்தாலும் மதுவிலக்கை அமல்படுத்துங்கள்: நடிகர் சிவகுமார் உருக்கம்
‘முதல் வேலையாக மதுவிலக்கை அமல்படுத்துங்கள், இல்லையென்றால் படிப்படியாக அமல்படுத்துங்கள்’ என்று நடிகர் சிவகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சென்னை தி.நகரில் சிவகுமார் மற்றும் கார்த்தி ஆகியோர் தங்களது வாக்கை பதிவு செய்தார்கள்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சிவகுமார், “எல்லா கட்சியுமே மதுவிலக்கை அமல்படுத்துவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். யார் ஜெயிப்பாங்க என்பது தெரியாது. யார் ஜெயித்தாலும் முதல் வேலையாக அதை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் 40 வருடத்தில் 1 கோடி பேரைக் குடிகாரர்களாக ஆக்கிவிட்டோம். 50 லட்சம் பேர் குடி நோயாளியாக இருக்கிறார்கள். குடும்பத்தலைவனைக் குடிகாரனாக்கி அவன் ஈரலைப் பெரிதாக்கி அவனை சாகடித்துவிட்டு இலவசங்கள் என்ற பெயரில் ஏன் வாக்கரிசிப் போடுகிறீர்கள்.
பாலியல் பலாத்காரம் என்று சொல்றோமே அதற்கு காரணம் மது. எவ்வளவு பெரிய கோழையாக இருந்தாலும் 400 மில்லி மது குடித்தான் என்றால் அசாத்திய தைரியம் வருகிறது. அதன் விளைவு அவனுடைய மிருக வெறிக்கு அம்மா, மகள், மனைவி என எந்த வித்தியாசமும் தெரியாது.
95 வருடமாக எந்த ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக பெரியார் கஷ்டப்பட்டாரோ அந்த இனம் தான் டாஸ்மாக்கில் செத்துக் கொண்டிருக்கிறது. 7 கோடி மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். முதல் வேலையாக மதுவிலக்கை அமல்படுத்துங்கள் இல்லையென்றால் படிப்படியாக அமல்படுத்துங்கள்” என்று தெரிவித்தார்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.