பாபர் மசூடி இடிப்பு குறித்து அத்வானி மற்றும் உமா பாரதியிடம் மீண்டும் விசாரணைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் 1992-ம் ஆண்டு டிசம்பர் 6-ந்தேதி பாபர் மசூதி இடிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக 2 வகையிலான வழக்குகள் தனித்தனி கோர்ட்டுகளில் நடைபெற்று வருகின்றன.
அதாவது பெயர் குறிப்பிடாத கரசேவகர்களுக்கு எதிரான வழக்கு லக்னோ கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. பா. ஜனதா மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட மிகவும் முக்கிய பிரமுகர்களுக்கு எதிரான வழக்குகள் ரேபரேலி சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமா பாரதி உள்ளிட்டோருக்கு எதிரான குற்றச்சதி எனும் குற்றச்சாட்டை ரேபரேலி கோர்ட்டு ரத்து செய்தது. அலகாபாத் ஐகோர்ட்டும் இதை உறுதி செய்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சி.பி.ஐ.யும், ஹாஜி மகபூப் அகமது என்பவரும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர்.
இந்த மேல்முறையீட்டு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பி.சி. கோஷ், ஆர்.எல். நாரிமன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் இன்று தீர்ப்பு வழங்கியது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் எல்.கே. அத்வானி, முரளிமனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை மீண்டும் விசாரிக்க சி.பி.ஐ.க்கு அனுமதி வழங்கி சுப்ரீம் கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டது.
பாபர் மசூதி இடிப்பின் போது உத்தரபிரதேச முதல்-மந்திரியாக இருந்த கல்யாண்சிங்கை இந்த வழக்கில் இருந்து விடுவித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அவர் தற்போது ராஜஸ்தான் கவர்னராக இருக்கிறார்.
இந்த வழக்கை காலதாமதமின்றி 4 வாரத்துக்குள் தொடங்க வேண்டும் என்றும், தினசரி வழக்கு விசாரணையை நடத்தி 2 ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என்றும் லக்னோ கோர்ட்டுக்கு உத்தரவிட்டது.
மேலும் இரண்டு வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்க வேண்டும் என்றும், வழக்கை விசாரிக்கும் நீதிபதிகளை இடமாற்றம் செய்யக்கூடாது என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவி காலம் நிறைவடைய உள்ள நிலையில் அடுத்த ஜனாதிபதியாக பா.ஜனதா சார்பில் எல்.கே.அத்வானியை வேட்பாளராக நிறுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு அவருக்கு பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.