அத்வானி மந்திரிசபை விரிவாக்க நிகழ்ச்சியைப் புறக்கணித்தார்.
மோடி தலைமையிலான மத்திய மந்திரி சபை 2-வது முறையாக நேற்று (செவ்வாய்க்கிழமை) விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில் 10 மாநிலங்களைச் சேர்ந்த 19 புதிய முகங்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடி தலைமையில் மத்தியில் 2014 மே மாதத்தில் ஆட்சி அமைந்தது. முதன்முறையாக கடந்த 2014 நவம்பரில் மத்திய மந்திரி சபை விரிவாக்கம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது 2-வது முறையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மந்திரி சபையில் 64 பேர் உள்ளனர். அதிகபட்சமாக 82 அமைச்சர்கள் இருக்கலாம் என்ற நிலையில் நேற்று 19 புதிய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டுள்ளனர்.
புதிய அமைச்சர்கள் 19 பேருக்கும் குடியரசுத் தலைவர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பிரதமர் மோடி உள்ளிட்ட மந்திரிகள் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர். மூத்த தலைவர் அத்வானி இந்த விழாவில் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில் பதவியேற்பு விழாவின் போது மும்பையில் உடல் நிலை சரியில்லாத தன்னுடைய தங்கையுடன் அத்வானி இருந்ததாக கூறப்படுகிறது.
முன்னதாக, பதவியேற்பு விழாவிற்கான முறைப்படியான அழைப்பிதழ் அவரது அலுவலகத்திற்கு வருவதற்கு முன்பே அவர் தனது தங்கையை காண சென்றுவிட்டதாக அவரது உதவியாளர் தெரிவித்தார்.
பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் சுஷ்மா ஸ்வராஜூம் விழாவில் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் தனது ட்விட்டர் பக்கத்தில், “என்னால் அமைச்சர்கள் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. ஆனால் தயவு செய்து இதை தலைப்புச் செய்தி ஆக்காதீர்கள்” எனக் குறிப்பிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
–அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.