நீதிபதிகள் பற்றாக்குறை தேசத்துக்கு சவாலான பிரச்சினை: சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கவலை
கோர்ட்டுகளில் நீதிபதிகள் பற்றாக்குறை இருப்பது தேசத்துக்கு சவாலான பிரச்சினை என சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கவலையுடன் கூறினார்.
இமாசலபிரதேச மாநிலத் தலைநகர் சிம்லா அருகே உள்ள காந்தல் என்னும் இடத்தில் முதல் தேசிய சட்டப்பல்கலைக்கழகம் நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
அண்மைக்காலமாக சுப்ரீம் கோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டுகளில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்புவது குறித்து வெளிப்படையாக கருத்து தெரிவித்து வரும் டி.எஸ்.தாக்குர் நேற்றும் தனது பேச்சின்போது நீதிபதிகள் பணியிடங்கள் குறித்து கவலையுடன் குறிப்பிட்டார்.
விழாவில் அவர் பேசியதாவது:-
இமாசலபிரதேச ஐகோர்ட்டுகளிலும், துணை கோர்ட்டுகளிலும் நீதிபதிகள் போதுமான எண்ணிக்கையில் இருக்கின்றனர். இது நீதித்துறையை பலப்படுத்துவதாக அமையும். ஆனால் மற்ற மாநில ஐகோர்ட்டுகளில் நீதிபதிகள் போதிய அளவில் இல்லை. நிலுவையில் உள்ள வழக்குகளை தள்ளுபடி செய்யும்போது நீதிபதிகள் தங்களுடைய பணியை மிகுந்த நேர்மையான முறையில் செய்யவேண்டும்.
நீதிபதிகள் பணியிடங்கள் பற்றாக்குறையாக இருப்பது தேசத்துக்கு சவாலான பிரச்சினை ஆகும். இதனால்தான் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. இதை கவனத்தில் கொண்டுதான் கோர்ட்டுகளில் காலியாக உள்ள நீதிபதிகள் பணியிடங்களை நிரப்பவேண்டும் என்ற கோரிக்கையை மத்திய அரசிடம் வற்புறுத்தி வருகிறேன்.
நாட்டில் உள்ள 8 மாநில ஐகோர்ட்டுகளில் மட்டும் 80 சதவீத வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. மற்ற மாநிலங்களில் அவ்வளவாக வழக்குகள் தேங்கவில்லை. ஒட்டுமொத்த வழக்குகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் உத்தரபிரதேசத்தில் 25 சதவீத வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன.
இதையடுத்து மராட்டியம், தமிழ்நாடு, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்கள் இந்த வரிசையில் வருகின்றன. இதனால் நீதித்துறை விமர்சனத்துக்கு உள்ளாகிறது.
கல்வி அறிவும், வசதியும் கோர்ட்டு வழக்குகளுடன் தொடர்பு கொண்டதாக இருக்கிறது. கல்வி அறிவு பெற்றவர்கள் அதிகம் வசிக்கும் கேரளாவில் நிறைய வழக்குகள் பதிவாகிறது. கல்வி அறிவு அதிகம் இல்லாத ஜார்கண்டில் வழக்குகள் குறைவாக உள்ளன. வசதி கொண்டவர்களும், தங்களது உரிமைகளுக்காக அதிக எண்ணிக்கையில் கோர்ட்டை நாடுகின்றனர்.
இதுபோன்ற நிறுவனங்களை (கோர்ட்டுகள்) அமைப்பதற்கு பெரும் அளவிலான பணம் செலவிடப்படுகிறது. இவற்றை முழுமையாக பயன்படுத்தாமல் இருப்பது முறையற்றது. சட்டத்தை மீறும் செயலும் ஆகும்.
இவ்வாறு அவர் பேசினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.