தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
“பாஜகவின் அடிமைக் கூட்டம்” என்று சகலதரப்பினராலும் அடையாளம் காணப்பட்டு, கடந்த ஒரு வருட காலமாகவே “அர்ச்சனை” செய்யப்பட்டு வரும் நிலையில், அதைப் பாராட்டு பத்திரமாக நினைத்துப் பவ்யம் கடைப்பிடித்து, எந்த சந்தர்ப்பத்திலும் திருவாய் மலராத எடப்பாடி, இப்போது திடீரென, மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க.வுடன் தற்போது கூட்டணி எதுவும் அமைக்கவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
பாரதிய ஜனதா கட்சியின் கிளைக்கட்சி போலவே அவர்களின் அடிதொழுது, ஆணைகேட்டு கொத்தடிமையாக அ.தி.மு.க செயல்பட்டு வருவதை தமிழ்நாடு மட்டுமல்ல, அகில இந்தியாவும் நன்கு அறியும்.
சட்டப்பேரவையில் பெரும்பான்மை எம்.எல்.ஏக்கள் இல்லாத இந்த “மைனாரிட்டி ஆட்சி” இன்னமும் ஆட்சியில் நீடிப்பதற்கும், ஊழல் கொள்ளையைத் தொடர்வதற்கும் காரணம் கூட பா.ஜ.க. வுடனான கூட்டணிதான் என்பது தமிழக மக்களுக்குத் தெரியும்.
தமிழக மக்களை ஏமாற்றித் திசை திருப்பிடும் வகையிலும், பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்றும், கூட்டணிக்கான தேவை இருந்தால் அது தேர்தல் நேரத்தில் ஆலோசிக்கப்படும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருப்பதை யாரும் நம்பப் போவதில்லை.
சொந்தக்கட்சி எம்.எல். ஏ.,க்களே முதல்-அமைச்சரை மாற்ற வேண்டும் என பொறுப்பு ஆளுநராக இருந்த வித்யாசாகர் ராவ்விடம் மனு கொடுத்த காரணத்தால், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அமைச்சரவை பெரும்பான்மை இழந்தது.
எனினும், சட்டமன்றத்தில் இதற்கான வாக்கெடுப்பை நடத்தாமல் காலம் தாழ்த்தி, இழந்த பெரும்பான்மையைச் சமாளிக்கும் வகையில், டெல்லியில் கட்டப்பஞ்சாயத்து நடத்தப்பட்டு, எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் சுயநலநோக்கில், பலவித பேரங்களுடன் ஒன்றாக இணைத்து வைக்கப்பட்டதற்கு முழுக்க முழுக்க பா.ஜ.க.வே காரணம் என்பது இந்தியாவே அறிந்ததுதான்.
தமிழக திட்டங்கள் பற்றி வலியுறுத்துவதற்காக பிரதமரைச் சந்தித்ததாக ஓ.பன்னீர்செல்வம் அப்போது பேட்டி கொடுத்த நிலையில், அப்படி எந்தத் திட்டத்தையும் அவர் வலியுறுத்தவில்லை என்பதைத் தகவலறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்கள் அம்பலப்படுத்திவிட்டன.
இவையெல்லாம் அப்பப்பட்டமாக மக்கள் மனதில் பதிந்துள்ள நிலையில், பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று முதல்-அமைச்சர் சொல்வதை நம்புவதற்குத் தமிழக மக்கள் தயாராக இல்லை.
நெடுவாசல்- கதிராமங்கலம் உள்ளிட்ட இடங்களில் விவசாயிகளும், பொதுமக்களும் நடத்திய உறுதிமிக்க போராட்டத்திற்கு செவி சாய்க்காமல், மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு இணக்கமாக செயல்பட்ட அ.தி.மு.க. அரசால் தமிழக விவசாயத்தின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழக மாணவர்களின் மருத்துவக் கனவை நொறுக்கி, அரியலூர் அனிதாவின் உயிர்ப்பறிப்புக்கு காரணமான ‘நீட் தேர்வு’ தொடர்பாக சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தத்திற்கு, மத்திய அரசின் ஒப்புதலைப் பெறத் தவறியது மட்டுமின்றி, பா.ஜ.க.வுடனான கூட்டணியால் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக சமூகநீதியையே சாக்காட்டுக்கு அனுப்பிய ஆட்சிதான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சி.
மாநில சுயாட்சிக்கு சவால் விடும் வகையில், மத்திய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர், தமிழகத்தின் பல பகுதிகளிலும் மேற்கொள்ளும் ஆய்வுகள் குறித்து வாய் திறக்காமல், மத்திய அரசிடம் அது குறித்து வலியுறுத்தாமல், பா.ஜ.க.வின் கூட்டணிக்காக மாநில உரிமைகளை தன்மானம் சிறிதுமின்றி அடகு வைத்த ஆட்சியாளர்கள், பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று சொன்னால் யார்தான் நம்புவார்கள்?
அனைத்து நிலைகளிலும் தமிழ்நாடு பின்னடைவைச் சந்தித்து, பெரும் கடன் சுமையில் தத்தளிக்கும் நிலையில், ஆட்சியைக் காப்பாற்றி, பதவிச்சுகத்தை அனுபவித்துக் கொள்வதை மட்டுமே ஒரே இலட்சியமாகக் கொண்டு செயல்படும் இரட்டைக்குழல் அல்ல, ‘இருட்டுக் குழல்’ துப்பாக்கிகளான இ.பி.எஸ் ஓ.பி.எஸ் இருவரும், அவர்களைச் சார்ந்தவர்களும் பலவகை லாபங்களுக்காக கூச்சமே இல்லாமல் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து, அதன் அங்கமாகவே செயல்படும் கிளைக்கட்சியாக, அ.தி. மு.க.வை மாற்றிவிட்டார்கள்.
அ.தி.மு.க.வினரும் அடிமைச் சாசனமும், அழுக்குச் சரித்திரமும் எழுதிவிட்டார்கள் என்பதே உண்மை. இதனை எத்தகைய பசப்பு வார்த்தைகளாலும், பொய்யுரைகளாலும் அவர்களால் மறைக்கவே முடியாது. “தன்னெஞ்சறிவது பொய்யற்க” என்ற அய்யன் திருவள்ளுவரின் வாக்கிற்கொப்ப, பொய் சொல்லும் எடப்பாடியின் நெஞ்சு எப்போதுதான் சுடுமோ?
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.