அதிமுக ஒரு வன்முறை இயக்கம்- ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு.
தீரன் சின்னமலையின் 211வது நினைவு தினம் ஈரோடு மாவட்டம் ஓடாநிலை கிராமத்தில் உள்ள தீரன் சின்னமலையின் நினைவிடத்தில் கடைபிடிக்கப்பட்டது. பல்வேறு கட்சி தலைவர்கள் மரியாதை செலுத்தினர். தொடர்ந்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ஈவிகேஎஸ் இளங்கோவன் தீரன் சின்னமலை சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘’தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஐந்தாவது ஆறாவது இடத்தில் இருந்தது. ஆனால் தற்போது மூன்றாவது கட்சியாக வளர்ந்துள்ளது. மேலும், காங்கிரஸ் கட்சி பலம் வாய்ந்த இயக்கமாக தொடர்ந்து உருவாகி வருகிறது. தமிழ்நாட்டில் ஆட்சி செய்யும் ஜெயலலிதா அந்த கட்சியை சேர்ந்த பெண் எம்பியான சசிகலா புஷ்பாவை அடித்தார் என்று அந்த பெண் எம்பியே பாராளுமன்றத்தில் பதிவு செய்துள்ளார். உயிருக்கு பாதுகாப்பும் கேட்டுள்ளார்.
அதிமுகவின் இந்த அராஜக போக்கு தொடர்ந்து வருகிறது. ஏற்கனவே, தருமபுரியில் அப்பாவி கல்லூரி மாணவிகள் மூன்று பேரை எரித்துக்கொன்றார்கள். தமிழ்நாட்டை சேர்ந்த சுப்பிரமணிய சாமியை ஜெயலலிதாவுக்கு எதிரான கருத்து கூறினார் என்று ஜெயலலிதாவால் தூண்டி விடப்பட்ட அதிமுகவினர், நீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமிக்கு அநாகரீகமான வரவேற் பெல்லாம் கொடுத்தார்கள். அதுபோலத்தான் எம்பி சசிகலா புஷ்பாவை அடித்த விவகாரமும். அதிமுக ஒரு வன்முறை இயக்கம்’’என்றார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.