நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் இன்று வேலைநிறுத்தம்
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் இணைப்பு, வங்கிகளை தனியார் மயமாக்கல் போன்ற கொள்கைகள் எதிர்ப்பு, வாராக்கடனாக நிலுவையில் உள்ள ரூ.13 லட்சம் கோடியை வசூலிக்க அதிரடி நடவடிக்கை எடுத்தல் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 12 மற்றும் 13-ந்தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் அறிவித்து இருந்தது.
இதற்கு டெல்லி ஐகோர்ட்டு தற்காலிக தடை விதித்ததால் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக வங்கி ஊழியர் சம்மேளனம் தெரிவித்தது. இதற்கிடையே, 29-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இந்தியா முழுவதும் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அகில இந்திய வங்கிகள் சம்மேளனம் ஏற்கனவே அறிவித்தது. இதையடுத்து, கடந்த சில தினங்களுக்கு முன்பு வங்கி ஊழியர் சங்க பிரநிதிகளுடன் மத்திய தொழிலாளர் நல ஆணையர் தலைமையிலான குழு பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததையடுத்து திட்டமிட்டபடி வேலை நிறுத்தம் நடைபெறும் என்று வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவித்தது.
அதன்படி இன்று ஒருநாள் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இதில் சுமார் 10 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்றும் ஐக்கிய வங்கி ஊழியர்கள் சங்கத்தின் தமிழ்நாடு பிரிவின் அமைப்பாளர் டி.தாமஸ் பிரான்கோ அறிக்கை ஒன்றில் தெரிவித்து உள்ளார். வேலைநிறுத்தத்தையொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் அவர் கூறி இருக்கிறார். தங்கள் கோரிக்கைகள் தொடர்பாக, பாராளுமன்றத்தில் மத்திய அரசு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.