வைகோவின் பேச்சுக்கு அனைத்துக்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி குறித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ சாதி ரீதியாக பேசிய பேச்சுக்கு மக்கள் நலக்கூட்டணி தலைவர் கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். அனைத்து கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்யினின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தே.மு.தி.க. கட்சியை உடைப்பதற்கு தி.மு.க.வின் தூண்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை வைகோ விமர்சித்தார். அந்த சமயம் தி.மு.க. தலைவர் கருணாநிதி மற்றும் தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் தொடர்பாக அரசியலுக்கு அப்பாற்பட்டும், சாதிய தொழில் குறித்தும் தெரிவித்த கருத்துக்கள் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிக்கு ஏற்புடையதல்ல.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜன் கூறும்போது, “வைகோ சொன்னது அரசியலுக்கு அப்பாற்பட்ட கருத்துக்கள்” என்றார்.
விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் கூறும்போது, “தனி நபர் விமர்சனங்களில் விடுதலை சிறுத்தைகளுக்கு உடன்பாடு கிடையாது. தே.மு.தி.க– மக்கள் நலக்கூட்டணியை பலவீனப்படுத்தும் முயற்சியில் இறங்குவதும், அந்த அடிப்படையில் தேர்தலை சந்திப்பதும் கூடாது. அதற்கு எதிர்மறையாக தனிநபர் விமர்சனமும் கூடாது” என்றார்.
விடுதலை சிறுத்தை கட்சி யின் பொதுச்செயலாளர் ரவிக்குமார் கூறும்போது, “சாதி ரீதியான குறி வைத்து பேசுவது ஏற்புடையதல்ல” என்றார்.
மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் கூறியதாவது:–
வைகோ, கருணாநிதி குறித்து பேசியது அநாகரிகத்தின் உச்ச கட்டத்துக்கு சமமானது என்று நான் கருதுகிறேன். வைகோ பேசி உள்ளது மிகவும் மோசமானது. வேதனை அளிக்கிறது.
இப்படிப்பட்ட அரசியல் தூக்கி எறியப்பட வேண்டும். எந்த ஒரு கட்சி தலைவரையும் இது போன்று பேசக்கூடாது. இந்த பேச்சு கடும் கண்டனத்துக்குரியது.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறியதாவது:–
அரசியலுக்கு அப்பாற்பட்டு தமிழர்களுக்கும், தமிழ் சமுதாயத்துக்கும் கருணாநிதி வாழ்ந்து வருகிறார். எல்லோராலும் மதிக்கக்கூடியவர். அவரை வைகோ ஒருமையில் பேசியிருப்பதாக கேள்விப்பட்டேன். அது உண்மை என்றால் வைகோ மீது நான் வைத்திருந்த கொஞ்சம், நெஞ்சம் மரியாதையும் எனக்கு போய்விட்டது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–கலைஞர் மற்றும் தி.மு.க. மீது வைகோ முன்வைத்த குற்றச்சாட்டை நாகரிகமான வார்த்தைகளில் வெளிப்படுத்தி இருக்கலாம். ஆனால், காழ்ப்புணர்ச்சியின் மிகுதியில் வைகோ உதிர்த்த கண்ணியமற்ற வார்த்தைகள் நாகரிக சமுதாயத்தில் எவராலும் ஏற்றுகொள்ள முடியாதவை. இதற்காக அவர் கலைஞரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டிருக்கிறார். எனினும், வார்த்தைகள் ஏற்படுத்தி மனக்காயத்தை மன்னிப்பு நிச்சயமாக குணப்படுத்தாது. ‘யாகவராயினும் நாகாக்க’ என்ற வள்ளுவரின் வார்த்தைக்கு பல சொற்பொழிவுகளில் வைகோ சிறப்பான விளக்கமளித்திருக்கிறார். அவ்விளக்கத்திற்கேற்ப அவர் நடந்து கொள்ள வேண்டும்.
வைகோவின் வார்த்தைகள் கலைஞரை மனதளவில் காயப்படுத்தியிருக்கும் என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. “தீயினாற்சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்டவடு” என்ற குறளுக்கு கலைஞர் மட்டும் விலக்காக இருக்க முடியாது. எனினும் 80 ஆண்டு கால அரசியல் வாழ்க்கையில் எத்தனையோ நச்சு அம்புகளின் தாக்குதலுக்கு ஆளாகி காயம்பட்ட தி.மு.க. தலைவர் கலைஞர் அவற்றைப் போலவே இதையும் பொருட்படுத்தாமல் பொதுவாழ்க்கையை தொடருவார் என நம்புகிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா கூறியதாவது:–
தமிழக அரசியலில் மூத்த அரசியல்வாதியான தி.மு.க. தலைவர் கலைஞரை பற்றி ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கூறிய கருத்துக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
ஒரு நாலாந்தர பேச்சாளரை போன்று தன்னிலை மறந்த நிலையில் அவர் சொன்ன கருத்துக்களை யாராலும் ஜீரணித்துக் கொள்ள முடியாது.
தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு பெரும் ஆதரவு பெருகி வரும் சூழலில் அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் வைகோ இத்தகைய தரம் தாழ்ந்த விமர்சனங்களை செய்து வருகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.