பிரதமர் பி.ஏ, எம்.ஏ டிகிரிகள் பெற்றதற்கான சான்றிதழ்களை அமித் ஷா வெளியிட்டார்.
பிரதமர் நரேந்திர மோடி பெற்ற கல்லூரி பட்டங்கள் பற்றி டெல்லி முதல்–மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால், மத்திய தகவல் ஆணையத்திடம் கேள்வி எழுப்பி இருந்தார். இதையடுத்து, இதுகுறித்த தகவல்களை அவருக்கு அளிக்குமாறு டெல்லி பல்கலைக்கழகத்துக்கும், குஜராத் பல்கலைக்கழகத்துக்கும் மத்திய தகவல் ஆணையம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக சர்ச்சை எழுப்பப்பட்ட நிலையில் பிரபல ஆங்கிலப் பத்திரிகையொன்று, குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்று முன்னர் செய்தி வெளியிட்டிருந்தது.
குஜராத் பல்கலைக்கழகத்தில் இருந்து கிடைக்கப்பெற்ற தகவலின்படி மோடி சிறந்த மாணவர், அரசியல் அறிவியலில் 1983-ம் ஆண்டு 62.3 சதவீதம் மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார் என்று ஆமதாபாத் மிரர் என்ற அந்தப் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.
ஐரோப்பிய அரசியல், இந்திய அரசியல் பகுப்பாய்வு மற்றும் அரசியல் உளவியல் அடங்கிய பாடங்கள் அடங்கிய 2 வருட பட்டப்படிப்பை முடித்துள்ள பிரதமர் மோடி எம்.ஏ. முதலாம் ஆண்டில் 400 மதிப்பெண்களுக்கு 237 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இரண்டாவது ஆண்டு 400 மதிப்பெண்களுக்கு 262 மதிப்பெண்கள் பெற்று உள்ளார். மொத்தமாக 800 மதிப்பெண்களுக்கு 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளார், என்று குஜராத் பல்கலைக்கழக துணைவேந்தர் தெரிவித்துள்ளதாக அந்தப் பத்திரிகை ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டது.
இதையடுத்து, மோடி பி.ஏ. படித்ததற்கான ஆதாரம் எங்கே? என்று அரவிந்த் கெஜ்ரிவால் கேள்வி எழுப்பியிருந்தார்.
இந்நிலையில், டெல்லியில் இன்று பத்திரிகையாளர்களுடனான அவசர சந்திப்புக்கு பா.ஜ.க. தலைமை அழைப்பு விடுத்தது. இந்த சந்திப்பின்போது பிரதமர் மோடிக்கு டெல்லி பல்கலைக்கழகம் அளித்த பி.ஏ. பட்டம் மற்றும் குஜராத் பல்கலைக்கழகம் அளித்த எம்.ஏ. பட்டத்தை பா.ஜ.க. தலைஅவர் அமித் ஷா மற்றும் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி ஆகியோர் வெளியிட்டனர்.
இதுபோன்ற தகவல்களை அளிப்பதற்காக பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தும் சூழ்நிலை உருவாகி விட்டதற்காக வருத்தப்படுவதாக தெரிவித்த அமித் ஷா, பிரதமரின் கல்லூரி பட்டம் தொடர்பாக பச்சைப்பொய்யை பரப்பி, நாட்டு மக்களிடையே அரவிந்த் கெஜ்ரிவால் குழப்பத்தை விளைவித்து விட்டார் என்று குற்றம்சாட்டினார்.
பொதுவாழ்க்கையின் தரத்தை தாழ்த்தியதோடு, உலகின் முன்னே இந்தியாவுக்கு அவமானத்தையும் அவர் ஏற்படுத்தி விட்டார். போதிய ஆதாரங்கள் இல்லாமல் பிரதமர்மீது அவதூறாக குற்றச்சாட்டுகளை சுமத்தியதற்காக டெல்லி முதல் மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் நாட்டு மக்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அமித் ஷா தெரிவித்தார்.
உண்மையை தெரிந்து கொள்ளாமல், இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது மிகவும் கீழ்த்தரமான செயலாகும் என்று நிதி மந்திரி அருண் ஜெட்லி கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.