ஐ.சி.சி. டெஸ்ட் பவுலர்களின் தரவரிசையில் இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ‘நம்பர் ஒன்’ இடத்தை வசப்படுத்தியுள்ளார்.
செஸ்டர் -லீ- ஸ்டிரிட்டில் நடந்த 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை தோற்கடித்து தொடரை கைப்பற்றியது. இந்த டெஸ்ட் நிறைவடைந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) டெஸ்ட் வீரர்களின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது.
இதில் பந்து வீச்சாளர்களின் தரவரிசையில் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் (மொத்தம் 884 புள்ளி) இரண்டு இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார். இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்டில் 10 விக்கெட்டுகளும், 2-வது டெஸ்டில் 8 விக்கெட்டுகளும் அள்ளிய ஆண்டர்சன் இதன் மூலம் 79 தரவரிசை புள்ளிகளை கூடுதலாக பெற்றது குறிப்பிடத்தக்கது. 2003-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடி வரும் 33 வயதான ஆண்டர்சன் தரவரிசையில் ‘நம்பர் ஒன்’ இடத்தை ஆக்கிரமிப்பது இதுவே முதல் முறையாகும்.
‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறிய 4-வது இங்கிலாந்து பவுலர் ஆண்டர்சன் ஆவார். 1980-ம் ஆண்டு இயான் போத்தம் முதல்முறையாக இச்சிறப்பை பெற்றார். அதன் பிறகு 2004-ம் ஆண்டு ஸ்டீவ் ஹார்மிசன், இந்த ஆண்டில் ஸ்டூவர்ட் பிராட் ஆகிய இங்கிலாந்து பவுலர்களும் முதலிடத்தில் இருந்துள்ளனர்.
இதுவரை முதலிடத்தில் இருந்த ஸ்டூவர்ட் பிராட் (869 புள்ளி) 3-வது இடத்துக்கு இறங்கியுள்ளார். இந்திய சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் (871 புள்ளி) 2-வது இடத்தில் நீடிக்கிறார்.
பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் முதல் 10 இடங்களில் எந்த வித மாற்றமும் இல்லை. ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் முதலிடத்திலும், இங்கிலாந்தின் ஜோ ரூட் 2-வது இடத்திலும், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 3-வது இடத்திலும் நீடிக்கிறார்கள். இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரஹானே 11-வது இடத்திலும், கேப்டன் விராட் கோலி 13-வது இடத்திலும் உள்ளனர்.
இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் 155 ரன்கள் விளாசிய இங்கிலாந்து வீரர் மொயீன் அலி 12 இடங்கள் உயர்ந்து 35-வது இடத்தை பெற்றுள்ளார். 10 ஆயிரம் ரன்களை கடந்த முதல் இங்கிலாந்து வீரர் என்ற சாதனையை படைத்த அலஸ்டயர் குக் 15-வது இடம் வகிக்கிறார்.
டெஸ்ட் ஆல்-ரவுண்டர்களின் தரவரிசையில் முதல் 3 இடங்களில் முறையே அஸ்வின், ஷகிப் அல்-ஹசன் (வங்காளதேசம்), ஸ்டூவர்ட் பிராட் ஆகியோர் உள்ளனர்.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.