நிதிஷ்குமார் மீது செருப்பு வீச்சு; வாலிபர் கைது.
பீகார் மாநிலத்தில் கடுமையான வெயில் காரணமாக கடந்த சில நாட்களாக ஏராளமான தீவிபத்துகள் நடந்தன. இதில் இதுவரை 79 பேர் பலியாகி உள்ளனர். இதனால் தீவிபத்து ஏற்படாமல் தடுக்க காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மக்கள் சமையல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று பீகார் மாநில அரசு ஆலோசனை கூறியது.
இது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. முதல்-மந்திரி நிதிஷ்குமாரின் முகாம் அலுவலகத்தில் ‘ஜனதா தர்பார்’ என்ற மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். இதில் நிதிஷ்குமார் பொதுமக்களின் மனுக்களை பெற்று, குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்துவருகிறார்.
இந்த மக்கள் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நேற்று முதல்-மந்திரி முகாம் அலுவலகத்தில் நடந்தது. அப்போது மனு கொடுக்க வந்த ஒரு வாலிபர் திடீரென தனது செருப்பை எடுத்து முதல்-மந்திரி நிதிஷ்குமார் மீது வீசினார். உடனே பாதுகாப்பு போலீசார் அந்த வாலிபரை மடக்கிப்பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த வாலிபரின் பெயரும் நிதிஷ்குமார் என தெரிந்தது. அர்வால் மாவட்டத்தை சேர்ந்த அவர், பகலில் சமையல் செய்ய வேண்டாம் என்ற அரசின் ஆலோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்க செருப்பு வீசியதாக தெரிகிறது. பின்னர் அந்த வாலிபரை போலீசார் சிறையில் அடைத்தனர்.
அவர் பார்ப்பதற்கு மனநிலை பாதித்தவர் போல இருந்தார். அதோடு அவர் ஏற்கனவே முந்தைய ஆட்சியில் முன்னாள் துணை முதல்-மந்திரி சுஷில்குமார் மோடி (பா.ஜனதா) மீதும் ஜனதா தர்பார் நிகழ்ச்சியின்போது இதேபோல செருப்பு வீசியதும் தெரிந்தது.
இதனால் அவரை மன்னித்து விடுதலை செய்யும்படி முதல்-மந்திரி நிதிஷ்குமார் அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். அதன்படி அவர் விடுதலை செய்யப்பட்டார். அந்த வாலிபர் வீசிய செருப்பு எனது மார்பின் மீது விழுந்தது என்று நிதிஷ்குமார் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.