பேரறிவாளனுக்குப் பரோல் கேட்டுத் தாயார் மனு.
முன்னாள் பிரமதர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனை பரோலில் விடுதலை செய்யக்கோரி அவருடைய தாய் அற்புதம் சிறை அதிகாரிக்கு மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–
25 வருடங்களாக சிறைபட்டிருக்கும் எனது மகன் பேரறிவாளனுக்காக முதன் முறையாக பரோல் கோரி விண்ணப்பித்துள்ளோம்.
நான் வாரா வாரம் வேலூர் சிறைக்கு சென்று எனது மகன் பேரறிவாளனை சந்திக்கின்ற போதெல்லாம் தவறாக தண்டிக்கப்பட்டு விட்டதால் நிரபராதி என்பதை நிரூபித்து நிச்சயம் விடுதலையாவேன் என ஆறுதல் கூறுவதோடு அதற்கான செயல்பாடுகளையும் விவாதிப்பான். அதே போல் 25 ஆண்டுகாலத்தில் பரோல் கேட்டு ஒரு நாளும் அவன் விண்ணப்பித்தது கிடையாது.
எனது மகன் உள்ளிட்டோர் விடுதலையை இன்று உலகெங்கிலுமுள்ள மனித உரிமை ஆர்வலர்கள் முன்னெடுப்பதும் தமிழகத்தில் கட்சி வித்தியாசம் இல்லாமல் அனைத்து தரப்பினரும் எனது மகன் உள்ளிட்டோரின் விடுதலையை எங்களைப் போலவே எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த சூழலில் தமிழக முதல்வர் அம்மா விடுதலை அறிவிப்பு அறிவித்தும் தொடர்ந்து அதற்கான பணி நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் எனது கணவர் ஞானசேகரன் (வயது 74) கடந்த சில வருடங்களாகவே தொடர் மருத்துவ சிகிச்சையில் இருந்து வருகிறார். ரத்த அழுத்தம், நீரழிவு நோய், முதுகுதண்டு வலி, ஆஸ்துமா, மூட்டு வலி என பல்வேறு நோய்களால் மிகுந்த அவதியுற்றுள்ளார்.
தற்போது நாங்கள் பார்த்து வந்த மருத்துவர்கள் எனது கணவரை மேல் சிகிச்சைக்கு பெரு நகருக்கு கூட்டிச் செல்லுமாறு வலியுறுத்தியுள்ளனர். எனது மகன் வந்து தான் கூட்டிச் செல்ல வேண்டிய சூழலினால் பேரறிவாளனை பரோலில் அனுப்பிவைக்க கோரி விண்ணப்பித்துள்ளோம்.
அதேசமயம் பரோலில் இருக்கின்ற போதே தமிழக முதல்வர் அம்மா பேரறிவாளன் உள்ளிட்டோரை உறுப்பு 161–ஐ பயன்படுத்தி விடுதலை செய்வார் என்கின்ற திடமான நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது.
எனது கணவரின் உடல் நிலைகருதி முதல் கட்டமாக பரோல் பெற்று ஓரிரு நாட்களில் வெளிவருவான் என்ற பெரு நம்பிக்கையுடன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.