திருப்பதி கோவிலின் ஆயிரம் கிலோ தங்கத்தை ஏற்க வங்கிகள் மறுப்பு; பாதுகாப்பு பயமே காரணம்.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பணம் மற்றும் தங்கத்தை மிகவும் தாராளமாக காணிக்கை செலுத்துவது வழக்கமாக உள்ளது. இதனால் அந்த ஆலயத்தில் தினமும் உண்டியல் மூலம் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரை வருவாய் கிடைக்கிறது.
திருப்பதி ஏழுமலையானுக்கு பக்தர்கள் இது வரை அளித்துள்ள நகைகளின் மதிப்பு மட்டும் பல ஆயிரம் கிலோவை கடந்து விட்டது. அதில் 1000 கிலோ நகையை ‘‘தங்க முதலீடு திட்டம்’’ கீழ் முதலீடு செய்ய திருப்பதி-திருமலை தேவஸ்தான அதிகாரிகள் முடிவு செய்தனர்.
இதையடுத்து பொதுத்துறை வங்கிகளை கடந்த 2 மாதத்துக்கு முன்பு திருப்பதி ஆலய அதிகாரிகள் அணுகி இது குறித்து பேசினார்கள். பக்தர்கள் பயன்படுத்திய நகைகளாக உள்ள அந்த 1000 கிலோ தங்கத்தில் ஒவ்வொரு வங்கிக்கும் எத்தனை கிலோ நகைகளை கொடுப்பது என்று பேசி வந்தனர்.
இந்த நகைகளை வங்கி அதிகாரிகள் தங்கள் பொறுப்பில் மும்பைக்கு அனுப்பி வைக்க வேண்டும். மும்பையில் அந்த நகைகள் உருக்கி 999 கே.டி.எம் ஆக மாற்றப்படும். இந்த பொறுப்பை ஏற்க வங்கி அதிகாரிகள் தயங்குகிறார்கள். இதனால் திருப்பதி கோவிலின் 1000 கிலோ நகைகள் கடந்த 2 மாதமாக எந்த வங்கிக்கும் செல்லாமல் உள்ளது.
இதற்கிடையே அடுத்த 2 மாதத்தில் மேலும் 400 கிலோ நகைகள் சேர்ந்து விடும் என்று தெரியவந்துள்ளது. எனவே 1000 கிலோ நகையை பெற்று கொள்ளும்படி வங்கிகளுடன் அதிகாரிகள் தொடர்ந்து பேசி வருகிறார்கள்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.