ஆர்.கே.நகர் தேர்தலில் விஷால் போட்டியால் தி.மு.க.வுக்கு பாதிப்பு இல்லை: இளங்கோவன் பேட்டி
தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று மாலைமலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
சென்னை ஆர்.கே.நகர் இடைதேர்தலில் நடிகர் விஷால் சுயேச்சையாக போட்டியிட களம் இறங்கி இருப்பது அவரது விருப்பம்.
நடிகர் விஷால் மட்டுமல்ல.. எந்த நடிகர்களும் தேர்தலில் போட்டியிடலாம். இது அவரவர்கள் விருப்பம். ஆனால் விஷாலால் நிச்சயமாக வெற்றி பெற முடியாது.
தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் மிகவும் சுறுசுறுப்பானவர். மக்கள் பிரச்சினைகளை நன்கு அறிந்திருப்பவர். ஆகவே ஆர்.கே.நகர் இடை தேர்தலில் நடிகர் விஷால் போட்டியால் தி.மு.க.வுக்கு வெற்றி பாதிப்பு இருக்காது. அங்கு மருது கணேஷ் வெற்றி உறுதியான ஒன்று. ஏற்கெனவே தினகரன் போட்டியிடும்போது அவருக்காக அப்போது பணத்தை வாரி இரைத்து செலவு செய்தது இப்போது முதல்வராக இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் துணை முதல்வராக இருக்கும் ஓ.பி.எஸ்.சும் தான். ஆகவே இப்போது மீண்டும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்த தினகரனின் வேட்பு மனுவையும் மற்றும் அ.தி.மு.க வேட்பாளர் மதுசூதனன் வேட்பு மனுவையும் உடனடியாக தேர்தல் கமிஷன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
பிரதமர் மோடியின் செயல்பாட்டால் மக்கள் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்கள். குஜராத் மற்றும் இமாச்சல பிரதேசத்தில் பாரதீய ஜனதா மிகப்பெரிய அடியை பெறப்போகிறது. அதற்காக மக்கள் காத்திருக்கிறார்கள்.
இவ்வாறு ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.