பரதநாட்டியம் பயின்ற பெண் ராணுவ அதிகாரியாக பதவி ஏற்றார்.
சென்னை ராணுவ அதிகாரிகள் பயிற்சி மையத்தில் நேற்று பயிற்சியை நிறைவு செய்த 183 பேர், லெப்டினன்ட்டுகளாக பதவி ஏற்றுக்கொண்டனர்.
இதில், தமிழகத்தின் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ஜி.வைஷாலி என்ற பரத நாட்டிய கலைஞர் ராணுவ அதிகாரியாக பதவியேற்றுக்கொண்டார். இவரது தந்தை எஸ்.சி.கணேசன் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். தாயார் ஜெயந்தி இல்லத்தரசி. இவருக்கு மஞ்சுளா என்ற சகோதரியும் உள்ளார். வைஷாலி முதல் தலைமுறையாக ராணுவத்தில் சேர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தவிர கோவையை சேர்ந்த ஸ்ரீவித்யா, ஸ்ரீவத்சன் உள்பட சுமார் 10-க்கும் மேற்பட்ட தமிழர்கள் ராணுவ அதிகாரிகளாக பதவி ஏற்றுள்ளனர்.
லெப்டினன்ட் பதவி ஏற்றுக்கொண்ட ஜி.வைஷாலி கூறியதாவது:-
எனது சொந்த ஊர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம். நான் சென்னையில் உள்ள எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரியில் பி.காம். பயின்றுள்ளேன். நான் கடந்த 16 வருடங்களாக பரதநாட்டியம் ஆடி வருகிறேன்.
கடந்த 2012-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் நடைபெற்ற கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்டு அகில இந்திய அளவில் சிறந்த பரதநாட்டிய கலைஞராக தேர்வு பெற்றேன். துபாய், மஸ்கட், எகிப்து, ரஷியா உள்ளிட்ட வெளிநாடுகளுக்கு சென்று பரதநாட்டியம் ஆடி உள்ளேன். டி.வி. நிகழ்ச்சிகளில் கலந்துள்ளேன்.
நான் கல்லூரியில் படிக்கும் போது, என்.சி.சி.யில் சேர்ந்து சேவை செய்ய ஆரம்பித்ததில் இருந்தே, ராணுவத்தில் சேர வேண்டும் என்று எண்ணி இருந்தேன். தற்போது அது நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ராணுவ அதிகாரியாக பணியாற்றினாலும், ஓய்வு நேரங்களில் எனது பரதநாட்டியத்தை தொடர்வேன்.
ராணுவத்தில் ஆண்களும், பெண்களும் சமமாகவே கருதப்படுகிறார்கள். முதலில் ஆண்களுடன் போட்டி போட்டு பயிற்சி பெறுவது சிரமமாக தெரிந்தபோதிலும், இப்போது அது மகிழ்ச்சியாகவே உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
திருப்பத்தூரைச் சேர்ந்த ராகுல் கூறியதாவது:-
நான் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துள்ளேன். இப்போது, ராணுவத்தில் லெப்டினன்டாக பதவியேற்றுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், ஒரே ஒரு வருத்தம் என்னவென்றால், தமிழகத்தை சேர்ந்தவர்கள் ராணுவத்தில் சிப்பாய்களாகத்தான் அதிக அளவில் இருக்கின்றனர்.
ராணுவ அதிகாரிகளாக பதவி பெறுவது எப்படி என்ற விழிப்புணர்வு அவர்களிடம் இல்லை. இந்த தேர்வு வருடத்திற்கு 2 முறை நடைபெறுகிறது. இதனை ‘எம்ப்ளாய்மென்ட் நியூஸ் பேப்பர்’ மூலமாகவோ அல்லது ராணுவத்திற்கான இணையதளத்தில் சென்று பார்வையிட்டு இந்த தேர்வை எழுத முன்வர வேண்டும்.
ராணுவத்தில் சேர இந்தி அல்லது ஆங்கிலம் சரளமாக தெரிய வேண்டும் என்று நினைத்து பலர் சேர முன்வருவதில்லை. ஆனால், அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். இங்கு வந்து சேர்ந்த பிறகு இந்தியை கற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.