தமிழகத்தில் காலூன்ற பாரதீய ஜனதா சதி திட்டம்: திருநாவுக்கரசர் பேட்டி
திண்டுக்கல்லில் மறைந்த பாரத பிரதமர் இந்திராகாந்தி நூற்றாண்டு விழா மகிளா காங்கிரஸ் சார்பில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் திருநாவுக்கரசர் கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் தற்போது ஸ்திரமற்ற தன்மை நிலவி வருகிறது. அ.தி.மு.க. இரு அணிகளாக பிளவுபட்டு அதனை இணைக்கும் முயற்சி நடந்து வருகிறது. தமிழக அமைச்சர்கள் பொம்மைகளாக உள்ளனர். அவர்களை ஆட்டுவிக்கும் பணியில் மோடி மற்றும் அமித்ஷா ஈடுபட்டு வருகின்றனர்.
பாரதீய ஜனதா தமிழகத்தில் காலூன்ற பின்புற வாசல் வழியாக முயற்சி எடுத்து வருகிறது. பல்வேறு சதி வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. அமைச்சர்கள் அதிகாரிகளை பயமுறுத்தி வருகின்றனர். பா.ஜனதா நிர்வாகிகள் சொல்வதுதான் நடந்து வருகிறது.
மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி விசாரணை வேண்டும் என்பதை நான் வரவேற்கிறேன். 75 நாட்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த போது அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவம் குறித்து பிரதமர், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், சுகாதாரத்துறை செயலாளர்கள், எய்ம்ஸ் டாக்டர்கள் ஆகியோரிடம் விளக்கம் கேட்க வேண்டும்.
தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படாத நிலையில் அவரை வெளிநாடு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க முன்வராதது ஏன்? இது போன்ற பல்வேறு சந்தேகங்களை பொதுமக்களுக்கு விளக்க வேண்டும்.
தமிழகத்தில் வறட்சி, மழை இல்லாத நிலை, டாஸ்மாக் போராட்டம் போன்றவற்றால் அரசு நிர்வாகம் செயல்படாமல் உள்ளது. விவசாயிகளுக்கு அளிக்கப்பட்ட வறட்சி நிவாரணம் போதுமானதாக இல்லை. விவசாயிகளைப் பற்றி மத்திய மாநில அரசுகள் அக்கறை இல்லாமல் உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.