வடகிழக்கு மாநிலத்தில் முதன்முறையாக ஆட்சி: அசாமில் பாரதிய ஜனதா வரலாற்று சாதனை படைத்தது
அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கூட்டணி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ள நிலையில் வடகிழக்கு மாநிலங்களில் முதன்முறையாக அங்கு பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது.
அசாமில் 126 தொகுதிகளுக்கு நடந்த சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில் இங்கு பாரதிய ஜனதா கூட்டணி 87 தொகுதிகளை வசப்படுத்தி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க. தனியாக 28 தொகுதிகளில் வெற்றி பெற்று 34 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. காங்கிரஸ் 23 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.
இதன்மூலம், வடகிழக்கு மாநிலங்களின் அரசியல் வரலாற்றில் முதன்முறையாக தேசிய கட்சியான பாரதிய ஜனதா அசாமில் ஆட்சி அமைக்கிறது.
அசாம் மாநில தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு சாதகமாக வந்துள்ள நிலையில் இந்த வெற்றி தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாடு முழுவதும் பாரதிய ஜனதா கட்சி மீது மக்கள் தங்கள் நம்பிக்கை வைத்து உள்ளனர். அனைத்து துறையிலும், அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை காணச்செய்யும் கட்சியாக பாரதிய ஜனதாவை பார்க்கிறார்கள். அசாமில் பாரதிய ஜனதா கட்சி பெற்றுள்ள வெற்றி எல்லாவகையிலும் வரலாற்று சிறப்புமிக்கது, தனிச்சிறப்பானது. இந்த சிறப்பான வெற்றிக்காக அசாம் மாநிலத்தை சேர்ந்த பாரதிய ஜனதா தொண்டர்கள், தலைவர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
அசாம் மக்களின் கனவுகளையும், எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்றுவதற்கு பாரதிய ஜனதா கட்சி தன்னால் இயன்ற அனைத்தையும் செய்யும். அந்த மாநிலத்தை வளர்ச்சிப்பாதையில், புதிய உயரங்களை நோக்கி அழைத்து செல்லும் என தனது அறிக்கையில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.