இடதுசாரிகளைப் பார்த்து பாஜக பயப்படுகிறது: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேட்டி
இறைச்சிக்காக மாடுகளை விற்க மத்திய அரசு விதித்துள்ள தடையை முதலில் எதிர்த்தவர் கேரள முதல்வர் பினராயி விஜயன். அந்தத் தடையை உடனடியாக வாபஸ் பெற வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதினார். மேலும், மத்திய அரசின் தடையை கடுமையாக எதிர்க்கும்படி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பினராயி விஜயன் கடிதம் எழுதி இருக்கிறார்.
மேலும், இந்த விவகாரம் குறித்து விவாதிக்க கேரளாவில் அனைத்துக் கட்சி கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். தமது கடிதத்துக்குப் பிரதமர் என்ன பதில் அளிக்கிறார் என்பதை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து அந்தக் கூட்டத்தில் விவாதிக்க உள்ளார்.
கல்வித்துறையைப் போலவே சுகாதாரத் துறையிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும். முதலில் குடும்ப மருத்துவர்கள் முறையை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம். மாநிலத்தில் உள்ள எல்லா முக்கிய மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்க தேவையான எல்லா வசதிகளையும் ஏற்படுத்த நினைக்கிறோம். அடுத்து மருந்துகளின் விலையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவேண்டும். நோயாளிகளுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்க வேண்டும்.
அதற்கான திட்டத்தை தொடங்கி இருக்கிறோம். வாழ்க்கை, பொருளாதாரத்தில் மேம்பட ‘லைப்’ என்ற பெயரில் இன்னொரு மிகப் பெரிய திட்டத்தையும் தொடங்கி இருக்கிறோம். கேரளாவில் வீடில்லாமல் யாரும் இல்லை என்ற நிலையை 5 ஆண்டுகளில் அடைவதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.
கேரளாவை பற்றி பல வதந்திகள் பரப்பப்படுகின்றன. கேரளாவுக்குப் புதிய தொழிற்சாலைகளை வரவேற்க புதிய கொள்கைகளை விரைவில் அறிவிக்க இருக்கிறோம். அப்போது நாட்டிலேயே தொழிற்சாலைகள் தொடங்க எல்லா வசதிகளும் கிடைக்கும் மிகச்சிறந்த மாநிலம் என்ற நிலைக்கு கேரளா மாறும்.
உங்கள் இடதுசாரி அரசு இந்தத் திட்டங்களைச் செயல்படுத்த விரும்பினால், அதற்கு பாஜக ஆளும் மத்திய அரசின் ஒத்துழைப்பு மற்றும் உதவிகளைக் கேட்டுப் பெற வேண்டுமே? பாஜக.வுக்கும் குறிப்பாக பிரதமர் மோடிக்கும் மார்க்சிஸ்ட் கட்சி என்றாலே சிக்கலானதாக இருக்கிறதே? மத்திய அரசுடன் உங்கள் நிலை என்ன?
மோடி தலைமையிலான மத்திய அரசின் கொள்கைகளில் அரசியல் ரீதியாக கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதை பலமுறை நாங்கள் தெளிவுப்படுத்தி இருக்கிறோம். அதேநேரத்தில் மத்திய அரசுடன் மாநில அரசுக்கு சில பிரச்சினைகள் உள்ளன. உதாரணத்துக்கு, கேரள மாநிலம் சந்தித்து வரும் சில பிரச்சினைகள் குறித்து பிரதமர் மோடியிடம் விளக்க நினைத்தோம். அதற்காக கேரள அனைத்துக் கட்சி பிரதிநிதிகள் குழு நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க நேரம் ஒதுக்கும்படி, சில மாதங்களுக்கு முன்பு கேட்டோம். அதற்கு பிரதமர் அனுமதி அளிக்கவில்லை. வழக்கமாக முதல்வர் தலைமையிலான குழுவைச் சந்திக்க எந்தப் பிரதமரும் மறுப்பதில்லை.
விமர்சனங்கள் எழுந்தாலும், கேரளாவுக்கும் மத்திய அரசுக்கும் இடையிலான உறவு உறுதியாகவே உள்ளது. உதாரணத்துக்கு கடந்த ஆண்டு மே மாதம் இடதுசாரி ஜனநாயகக் கூட்டணி பதவியேற்றதும் பிரதமர் உட்பட தலைவர்கள் பலரைச் சந்தித்து பேசினோம். அப்போது, கேரளாவில் ஆயுர்வேத நிறுவனம் தொடங்க விரும்பினால், மத்திய அரசு உதவி செய்ய தயாராக இருப்பதாக பிரதமர் மோடி உறுதி அளித்தார். உண்மையில் கேரளாவில் உலகத் தரத்தில் ஆயுர்வேத நிறுவனத்தை அமைக்க திட்டமிட்டுள்ளோம்.. இதற்கு மத்திய அரசின் உதவி கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். எனவே, மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் சுமூகமான உறவு உள்ளது என்று எங்களால் சொல்ல முடியும்.
மற்ற அரசியல் கட்சிகளைப் போல பாஜக வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல. மற்ற கட்சிகளைப் போல் இல்லாமல் பாஜக.வை எது வேறுபடுத்தி காட்டுகிறது என்றால், அந்தக் கட்சியை ஆர்எஸ்எஸ் இயக்குகிறது. ஆர்எஸ்எஸ் கொள்கைகளை நிலைநிறுத்தவே பாஜக செயல்படுகிறது. முக்கிய விவகாரங்களில் பாஜக சார்பில் ஆர்எஸ்எஸ் நேரடியாக முடிவெடுப்பது மிகத் தெளிவாக தெரிகிறது.
மதச்சார்பின்மையை ஆர்எஸ்எஸ் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் மதச்சார்பின்மையை, அமைச்சர்கள் சிலர் கூட கடுமையாக விமர்சித்துள்ளனர். இது மதச்சார்பின்மைக்கு நேரிடையாக விடுக்கப்பட்ட அச்சுறுத்தல். நமது அரசியலமைப்பு மதிப்பை கட்டிக் காக்க, பலம் வாய்ந்த எதிர்ப்பு வரவேண்டும். அந்த எதிர்ப்பை காங்கிரஸால் ஏற்படுத்த முடியாது. ஏனெனில், அந்தக் கட்சியைச் சேர்ந்த தேசிய தலைவர்கள், மாவட்ட தலைவர்கள், முன்னாள் முதல்வர்கள் கூட பாஜக.வில் சேர்ந்து வருகின்றனர். எனவே, காங்கிரஸை நம்ப முடியாது. காங்கிரஸை எதிர்க்கட்சியாக பாஜக கருதுவதில்லை.
ஆனால், பாஜக.வைப் பொறுத்தவரை அதன் கொள்கைகளில் முதல் எதிரி இடதுசாரிகள்தான். நாட்டில் இடதுசாரி சக்திவாய்ந்ததாக இல்லை. ஆனாலும், இடதுசாரியைப் பார்த்து பாஜக பயப்படுகிறது. கேரளாவிலும் திரிபுராவிலும் அதை நீங்கள் பார்க்கலாம். திரிபுராவில் இடதுசாரிகளுக்கு எதிரான சக்திகளை ஒன்று திரட்ட பாஜக முயற்சித்து வருகிறது. இடதுசாரி தான் பாஜக.வின் குறி என்பது இதன் அர்த்தம்.
சமுதாயத்தில் மதரீதியிலான பிரச்சினை களைத் தூண்டிவிட பாஜக.வும் ஆர்எஸ்எஸ்.ஸும் முயற்சிக்கின்றன. அதன்மூலம் பிரிவினையை ஏற்படுத்தி அரசியல் ஆதாயமடைய நினைக்கின்றன. இதைத் தடுக்க நாட்டு மக்களை ஆர்எஸ்எஸ்.ஸுக்கு எதிராக ஒன்றுதிரட்ட வேண்டும். கடுமையான எதிர்ப்பை தெரிவிக்க அனைத்து ஜனநாயக கட்சிகளும் ஒன்றுசேர வேண்டும்.
இவ்வாறு கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.