அதிமுக கட்சியில் பாஜக தலையிடுகிறது: ஜி.ராமகிருஷ்ணன் குற்றச்சாட்டு
ஆளுங்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவைப் பயன்படுத்தி மத்திய பாஜக அரசு தமிழகத்தில் ஆட்சியிலும், அதிமுக கட்சியிலும் தலையிடுகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”ஜெயலலிதாவின் மரணத்திற்குப் பிறகு அதிமுக 2 கோஷ்டிகளாக பிளவுபட்டது, அதிகாரம் மற்றும் ஊழல் பணத்தைப் பாதுகாப்பதற்கான முயற்சியே தவிர தமிழக மக்களின் நலன் சார்ந்ததோ, மாநில உரிமை சார்ந்ததோ அல்ல.
தற்போது பிரிந்தவர்கள் ஒரே அணியாக சேர்வதற்கான முயற்சிகளும், பிரிந்ததற்கான காரணங்களை நோக்கமாகக் கொண்டதே. லஞ்சம், ஊழல், தேர்தலில் வாக்குகளுக்கு பண விநியோகம் அனைத்தும் ஜெயலலிதா காலத்து செயல்பாட்டின் தொடர்ச்சியே.
அதிமுகவில் 2 அணிகள் பிரிவது அல்லது இணைவது அக்கட்சியின் உள்கட்சி விவகாரம் என்ற போதிலும், இவர்களது மோதலால் தமிழக மக்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் ஏராளம். இவர்களது சண்டையால் தமிழக அரசு செயலற்று முடங்கிப் போயுள்ளது.
வரலாறு காணாத வறட்சி, அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலை, கடும் குடிநீர் பஞ்சம், மத்திய அரசின் நீட் தேர்வால் பாதிப்புக்குள்ளாகும் தமிழக மாணவர்கள் உள்ளிட்ட எந்த பிரச்சினையும் தீர்வு காணப்படாமல் மக்களது வாழ்வு சீரழிந்து கொண்டிருக்கிறது.
தற்போது மேற்கொள்ளப்படும் சமரச முயற்சி என்பதும் எள்ளளவும் தமிழக மக்கள் நலன் சார்ந்ததல்ல. மேலும், ஆளுங்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவைப் பயன்படுத்தி மத்திய பாஜக அரசு தமிழகத்தில் ஆட்சியிலும், அதிமுக கட்சியிலும் தலையிடுகிறது. இதற்கு வருமானவரித் துறை உள்ளிட்ட அரசு அமைப்புகளை பயன்படுத்திக் கொள்கிறது.
தனது நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள கொல்லைப்புற அரசியல் நடவடிக்கையை பல மாநிலங்களில் மேற்கொண்டு வருவது போல தமிழகத்திலும் முயற்சிக்கிறது. தமிழகத்தில் காலூன்ற பாஜக மேற்கொண்டுள்ள இத்தகைய கீழ்த்தரமான முயற்சிக்கு அதிகாரமோகத்தில் அக்கறை கொண்டு அதிமுக தலைவர்கள் இடம் கொடுக்கிறார்கள்.
சட்டத்திற்கும், நியாயங்களுக்கும் புறம்பான பாஜகவின் இந்த முயற்சியை அதிமுக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகள் மற்றும் தமிழக மக்கள் முறியடிக்க வேண்டும்” என்று ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.