பாராளுமன்றத் தேர்தலுக்குத் தயாராகிறது பாரதிய ஜனதா.
உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைப் பிடித்த பா.ஜனதா கோவா, மணிப்பூர் மாநிலங்களிலும் ஆட்சி அமைத்தது. அடுத்து ஜனாதிபதி தேர்தல் வருகிறது. 5 மாநில தேர்தல் வெற்றியால் பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களின் பலம் அதிகரித்துள்ளது. இதனால் ஜனாதிபதி தேர்தலில் பா.ஜனதாவுக்கு வெற்றி வாய்ப்பு உருவாகியுள்ளது.
இதேபோல் அடுத்து வரும் பாராளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெற பா.ஜனதா மேலிடம் இப்போதே களம் இறங்கி வியூகம் வகித்து வருகிறது. மத்தியில் பிரதமர் மோடி தலைமையில் 2014-ம் ஆண்டு ஆட்சி அமைந்தது. அடுத்து 2019-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் வருகிறது.
கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனி மெஜாரிட்டியுடன் ஆட்சியைப் பிடித்தாலும் 120 தொகுதிகளில் தோல்வி ஏற்பட்டது. 2019 பாராளுமன்ற தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் வெற்றி என்ற இலக்கை அடைய பா.ஜனதா திட்டமிட்டு ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
எனவே இந்த 120 தொகுதிகளிலும் பா.ஜனதா தனி கவனம் செலுத்தி பிரசாரம் செய்ய முடிவு செய்துள்ளது. இந்த தொகுதிகளில் மோடி அரசின் 3 ஆண்டு சாதனைகளை மக்களிடம் விளக்கி கூறி பிரசாரம் மேற்கொள்ளுமாறு பா.ஜனதா நிர்வாகிகள் எம்.பி.க்கள், மத்திய மந்திரிகளுக்கு பா.ஜனதா மேலிடம் ஆலோசனை வழங்கியுள்ளது.
குறிப்பாக பிரதமர் மோடியின் அனைவருக்கும் வங்கி கணக்கு, வேலை வாய்ப்பு திட்டங்கள், செல்லாத நோட்டுகள் அறிவிப்பு நடவடிக்கையால் நாட்டின் பணவீக்கம் குறைந்து பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டது. கருப்பு பணம் ஒழிப்பு போன்ற திட்டங்கள் பற்றி மக்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து வருகிற 6-ந்தேதி முதல் எம்.பி.க்கள் அனைவரும் நாடு முழுவதும் தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. அப்போது அவர்கள் மக்களைச் சந்தித்து மோடி அரசின் சாதனைகளை விளக்கி பிரசாரம் செய்வார்கள். அம்பேத்கார் பிறந்த நாளான ஏப்ரல் 14-ந்தேதி வரை சாதனை விளக்க பிரசாரம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும் அனைத்து பாராளுமன்ற தொகுதிகளிலும் எம்.பி.க்களுடன் உள்ளூர் வட்டார நிர்வாகிகளும் சென்று பிரசார கூட்டங்கள் மற்றும் தனியாக கட்சி ஆலோசனை கூட்டங்கள் நடத்த வேண்டும். தேர்தல் பணியாற்ற பகுதி வாரியாக குழுக்கள் அமைத்து செயல்பட வேண்டும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுதொடர்பாக மூத்த தலைவர்கள் நாட்டின் முக்கிய நகரங்களில் கூட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதில் அமித்ஷா, ராஜ்நாத்சிங், அருண்ஜெட்லி, ஸ்மிருதி இரானி, நிதின் கட்காரி, உமாபாரதி, ரவி சங்கர் பிரசாத் உள்ளிட்ட மத்திய மந்திரிகள், மூத்த தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.