ரஜினி அரசியல் பிரவேசத்துக்கு பா.ஜனதா காரணம் அல்ல: தமிழிசை
ரஜினி அரசியலில் குதித்து இருப்பதன் பின்னணியில் பா.ஜனதா இருப்பதாக குற்றம் சாட்டப்படுவதை தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் மறுத்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
ரஜினி அரசியலில் ஈடுபடுவதும், கட்சி தொடங்குவதும் அவரது சொந்த முடிவு. இதில் பா.ஜனதாவுக்கு எந்த தொடர்பும் இல்லை.
யாரும் பின்னணியில் இருந்து இயக்க வேண்டிய நிலையில் ரஜினி இல்லை. பா.ஜனதாவுக்கும் எந்த கட்சிக்கும் பின்னால் இருந்து செயல்பட வேண்டிய அவசியம் இல்லை.
அ.தி.மு.க. பிளவுபட்ட போதும் பா.ஜனதாதான் இயக்குகிறது என்றார்கள். மோடி, கலைஞர் வீட்டுக்கு மரியாதை நிமித்தமாக சென்றதையும் தவறாக விமர்சிக்கிறார்கள். தி.மு.க. வுடன் கூட்டணி அமைக்கப் போவதாக சொல்கிறார்கள்.
தமிழகத்தின் அரசியல் நிலைமை இதுதான். பா.ஜனதா வளர்ந்துவிட கூடாது. வந்துவிட கூடாது என்ற ஒற்றை நோக்கத்தை தவிர இவர்களுக்கு வேறு எந்த எண்ணமும் இல்லை.
ஊழல் எதிர்ப்பு, ஆன்மீக அரசியல் என்று ரஜினி குறிப்பிட்டுள்ளார். நாங்களும் ஊழலை எதிர்ப்பவர்கள். ஆன்மீக அரசியல் வேண்டும் என்று விரும்புபவர்கள். எனவே ரஜினியின் புதிய கோணத்திலான அரசியலை வரவேற்கிறோம்.
ஆன்மீகம் வேறு. மதவாதம் வேறு. ஆன்மீகம் என்பது எல்லா மதத்துக்கும் பொதுவானது. நாத்திகம் என்ற பெயரில் ஆத்திகத்தை சிதைக்க நடக்கும் முயற்சியால் கட்டுப்பாடு, தர்மம் எல்லாம் சிதைக்கப்பட்டு வருவதால் நடக்கும் சமூக அவலங்களை எல்லோரும் பார்க்கிறோம். எனவேதான் ஆன்மீக அரசியல் தேவை என்று கருதுகிறோம். ஆதரிக்கிறோம்.
தனியாக ஹஜ் புனித யாத்திரை மேற்கொள்ளும் பெண்களுக்கு சலுகைகள் வழங்கியது பா.ஜனதா தானே. நாங்கள் மதவாதத்தை எதிர்க்கிறோம். ஆன்மீகத்தை ஆதரிக்கிறோம்.
இந்து மத தலைவர் ஒருவர் பா.ஜனதாவில் சேர்ந்து விட்டால் உடனே காவி தீவிரவாதம் பார்த்தீர்களா என்று வசைபாடுகிறார்கள். முத்தலாக்குக்கு எதிராக வழக்கு தொடர்ந்த இஸ்லாமிய பெண்மணி பா.ஜனதாவில் சேர்ந்து இருக்கிறோரே. இதற்கு என்ன சொல்ல போகிறார்கள்?
எது நடந்தாலும் பா.ஜனதா மீது பழிபோட காரணம். எப்படியாவது பா.ஜனதா வளர்ந்துவிட கூடாது என்ற பயம்தான் காரணம். இந்த திசை திருப்பும் அரசியல் மக்களிடம் வெகுநாள் எடுபடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.