விஜயகாந்தை முதலமைச்சர் வேட்பாளராக ஒப்புக்கொள்ள பாஜக தயார்.
தமிழக சட்டசபை தேர்தல் சூடுபிடிக்க தொடங்கி விட்ட நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அ.தி.மு.க.வுக்கு எதிரான பலமான கூட்டணியை அமைக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது. தி.மு.க., காங்கிரஸ் கட்சிகளிடையே கூட்டணி உருவாகியுள்ளது.
இக்கூட்டணியில் விஜயகாந்தை சேர்த்துக் கொண்டால் வெற்றி நிச்சயம் என தி.மு.க. கணித்துள்ளது. எனவே தி.மு.க.– காங்கிரஸ் கூட்டணியில் சேருமாறு விஜயகாந்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி நேரடியாக அழைப்பு விடுத்தார்.
இதற்கிடையே பா.ஜனதா மற்றும் மக்கள் நலக் கூட்டணியும் விஜயகாந்த் தங்கள் கூட்டணிக்கு வரவேண்டும் என அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால் அ.தி.மு.க. ஆட்சியை விமர்சனம் செய்து எதிரான கருத்துக்களை கூறிவரும் விஜயகாந்த் தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து விடுவார் என எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கான அறிவிப்பை காஞ்சீபுரத்தில் நடந்த தே.மு.தி.க. மாநாட்டில் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாநாட்டில் கூட்டணி பற்றிய அறிவிப்பை வெளிப்படையாக அவர் வெளியிடவில்லை. மாநாட்டில் கூடியிருந்த தொண்டர்களிடம் கூட்டணி வேண்டுமா? வேண்டாமா என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் நான் கிங் ஆக (முதல்–அமைச்சர்) இருக்க வேண்டுமா? ‘கிங் மேக்கர்’ ஆக (மற்றவர்கள் ஆட்சிக்கு துணையாக) இருக்க வேண்டுமா?) என கேட்டார். அதற்கு பதில் அளித்த தொண்டர்கள் நீங்கள் “கிங்” ஆக இருக்க வேண்டும் என்றனர். எனவே தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து தே.மு.தி.க. வேட்பாளர்கள் நேர்காணலின் போது ஆலோசித்து முடிவு செய்வேன் என்றார்.
இந்த நிலையில் விஜயகாந்தை முதல்–அமைச்சர் வேட்பாளராக ஏற்பதாக பா.ஜனதா அறிவித்தது. அக்கட்சியின் தேசிய செயலாளர் முரளிதரராவ் விஜயகாந்தை முதல்–அமைச்சர் வேட்பாளராக ஏற்க தயார் என தெரிவித்தார்.
அதே கருத்தை பா.ஜனதாவின் தமிழ்நாடு மாநில செயலாளர் கே.டி. ராகவனும் கூறியுள்ளார். எங்கள் கட்சியின் தேசிய செயலாளர் முரளிதர்ராவ் கருத்தை ஏற்கிறோம். விஜயகாந்த் தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறார். கடந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றிருந்தது. பெரிய கட்சியான தே.மு.தி.க.விற்கு அதிக தொகுதிகள் ஒதுக்கப்பட்டது என்றார்.
மக்கள் நலக் கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனும் விஜயகாந்தை முதல்–அமைச்சர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வதாக கூறியுள்ளார். இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர் டி.ரவிக்குமாரிடம் கேட்ட போது, மக்கள் நலக் கூட்டணியில் இணைய விஜயகாந்த் விரும்பினால் அதில் இடம் பெற்றுள்ள 4 கட்சி தலைவர்களும் கலந்து ஆலோசிப்போம் என்றார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.