இங்கிலாந்து இளவரசர் வில்லியம்சுக்கு மும்பையில் திரையுலக நட்சத்திரங்கள் வரவேற்பு ; ஷாருக் ஐஸ்வர்யா ராய் பங்கேற்றனர்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்ய இங்கிலாந்து பட்டத்து இளவரசர் பட்டியலில் இரண்டாவதாக இடம்பெற்றுள்ள வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத் மிடில்டன் ஆகியோர் மராட்டிய தலைநகரான மும்பை வந்தடைந்தனர்.
ஏப்ரல் 10 முதல் 17-ம் தேதிவரை அரசு விருந்தினராக இங்கு தங்கும் வில்லியம்-கேத் தம்பதியர் மும்பை, கவுகாத்தி, ஆக்ரா நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தாஜ் மஹால் உள்பட நாட்டிலுள்ள பல்வேறு முக்கிய இடங்களையும் சுற்றிப் பார்க்கின்றனர்.
இதற்காக, நேற்று பகல் சுமார் 12 மணியளவில் மும்பை நகரை வந்தடைந்த இளவரசர் வில்லியம் – கேத் மிடில்டன் தம்பதியர் இங்குள்ள தாஜ் ஹோட்டலில் தங்கியுள்ளனர். இந்த ஓட்டலில் உள்ள விழா அரங்கில் நேற்று மாலை அவர்களுக்கு பாலிவுட் பிரபலங்கள் சார்பில் பிரமாண்ட வரவேற்பு விழா நடத்தப்பட்டது.
இந்த வரவேற்பு விழாவில் நடிகர்கள் ஷாருக் கான், ஆமிர் கான், அனில் கபூர், ரிஷி கபூர், ஹ்ரித்திக் ரோஷன், பர்ஹான் அக்தர், நடிகைகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், மாதுரி திட்சித், அடிட்டி ராவ் ஹைதரி, ஹுமா குரைஷி, பழம்பெரும் நடிகர் ரிஷி கபூர், அவரது மனைவி நீட்டு, பாடகரும் இசையமைப்பாளருமான ஷங்கர் மஹாதேவன், ஓய்வுபெற்ற கிரிக்கெட் வீரர் சச்சின் தெண்டுல்கர் உள்ளிட்ட பல்துறை பிரபலங்கள் பங்கேற்றனர்.
இந்த வரவேற்புக்கு நன்றி தெரிவித்து பேசிய இங்கிலாந்து இளவரசர் வில்லியம், தனது பேச்சை தொடங்குவதற்கு முன்னர் கேரள மாநிலம், கொல்லம் மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற வெடி விபத்தில் பலியான பக்தர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
‘எனது பேச்சை தொடங்குவதற்கு முன்னதாக நானும் கேத்தரினும் (கேத் மிடில்டன்) கொல்லத்தில் ஏற்பட்ட கோர விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எங்களது இரங்கலை சமர்ப்பித்துக்கொள்ள விரும்புகிறோம். இந்த அரங்கத்தில் இருக்கும் நீங்கள் அனைவரும் எங்களது உணர்வுகளுடன் ஒன்றியே இருப்பீர்கள் என நம்புகிறோம்’ என்று குறிப்பிட்டார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.