இரட்டை இலை சின்னத்தை இரு அணிகளும் பயன்படுத்தத் தடை; அஇஅதிமுக என்ற பெயரையும் பயன்படுத்த முடியாது. தேர்தல் கமிஷன் உத்தரவு.
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரு அணிகளில் யாரும் இரட்டை இலை சின்னம் மற்றும் அ.தி.மு.க என்ற கட்சிப்பெயரையும் பயன்படுத்த தேர்தல் ஆணையம் தற்காலிக தடை விதித்துள்ளது.
முதல்-அமைச்சராகவும், அ.தி.மு.க. பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பின் சசிகலா தலைமையில் ஓர் அணியாகவும், முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஓர் அணியாகவும் அ.தி.மு.க. செயல் பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஏப்ரல் 12-ந் தேதி நடைபெற இருக்கும் ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்தை தங்களுக்கே ஒதுக்கவேண்டும் என்று இரண்டு அணியினரும் டெல்லி சென்று தலைமை தேர்தல் கமிஷனரிடம் மனு அளித்தனர்.
இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்பது குறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக தேர்தல் கமிஷன் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினரையும், சசிகலா தரப்பினரையும் நேற்று நேரில் அழைத்து விசாரணை நடத்தியது. தலைமை தேர்தல் கமிஷனர் நசீம் ஜைதி மற்றும் தேர்தல் கமிஷனர்கள் ஏ.கே.ஜோதி, ஓ.பி.ராவத் ஆகியோர் விசாரணை நடத்தினார்கள்.
நேற்று காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை மாலை 5.30 மணிக்கு முடிவடைந்தது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தேர்தல் கமிஷன், அவர்கள் தெரிவித்த கருத்துகள் பற்றி நீண்ட நேரம் ஆலோசித்தது.
பின்னர், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கோ அல்லது ஓ.பன்னீர்செல்வம் அணிக்கோ ஒதுக்குவது இல்லை என்றும், அந்த சின்னத்தை முடக்கி வைப்பது என்றும் முடிவு செய்தது.
இந்த தகவல் நேற்று இரவு 11 மணிக்கு இரு அணியினருக்கும் தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் அ.தி.மு.க. என்ற கட்சியின் பெயரை இரு அணியினரும் பயன்படுத்தக்கூடாது என்றும் உத்தரவிட்டு உள்ளது.
இரு அணியினரும் தாங்கள் எந்த பெயரால் அழைக்கப்படவேண்டும் என்பதை இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், சுயேச்சை சின்னங்களில் இருந்து ஏதாவது மூன்றை குறிப்பிட்டு அதில் ஒரு சின்னத்தை இன்று காலை பெற்றுக்கொள்ளலாம் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது.
இரு கட்சியினரும் தங்களிடம் உள்ள மற்ற ஆதாரங்களை தேர்தல் கமிஷனிடம் ஏப்ரல் 17-ந் தேதி கொடுத்து முறையிடலாம் என்றும் தேர்தல் கமிஷன் அறிவித்தது.
தேர்தல் கமிஷனின் இந்த முடிவு பற்றி தெரிய வந்ததும், இரு தரப்பினரும் தங்கள் அடுத்து கட்ட நடவடிக்கை குறித்து தனித்தனியாக அவசர ஆலோசனை மேற்கொண்டு உள்ளனர்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.