ஒப்பந்தத்தை மீறி கச்சத்தீவில் புதிய ஆலயம், கடற்படை முகாம் அமைத்து வரும் இலங்கை: தமிழக மீனவர்கள் கண்டனம்
இலங்கை அரசு ஒப்பந்தத்தை மீறி கச்சத்தீவில் புதிதாக அந்தோணியார் ஆலயம், கடற்படை முகாம் அமைத்து வருகிறது. இதற்கு தமிழக மீனவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கும், இந்தியாவிற்கும் இடைப்பட்ட நடுக்கடல் பகுதியில் கச்சத்தீவு அமைந்துள்ளது. இங்கு இந்தியா, இலங்கை இரு நாட்டு மீனவர்களும் 1970-ம் ஆண்டு வரையிலும் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் ஒற்றுமையுடன் மீன் பிடித்து வந்தனர். 1974-ம் ஆண்டுக்கு பின்னர் கச்சத்தீவு இலங்கை அரசிடம் ஒப்படைக்கப்பட்டு முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்பின் 1976-ம் ஆண்டு மார்ச் மாதம் 3-ந்தேதி கச்சத்தீவின் 2-வது ஒப்பந்தம் இருநாட்டு அதிகாரிகள் முன்னிலையில் போடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமான தீவு என்றும், கச்சத்தீவு கடல் பகுதியில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கக்கூடாது என்றும் ஆனால் ஆண்டுதோறும் கச்சத்தீவு அந்தோணியார் ஆலய திரு விழாவில் இரு நாட்டு மக்களும் வழக்கம்போல் கலந்து கொள்ளலாம் என்றும் ஒப்பந்தம் போடப்பட்டது.
அதிகாரிகளின் முன்னிலையில் நடைபெற்ற 2-வது ஒப்பந்தத்தால் தமிழக மீனவர்களின் உரிமைகள் பறிபோனது. கச்சத்தீவு திருவிழாவில் பங்கேற்கும் உரிமை மட்டும் தொடர்கிறது.
கச்சத்தீவில் உள்ள ஆலயத்தில் ஆண்டு தோறும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் 2 நாட்கள் மட்டும் திருவிழா நடைபெறும். இந்தநிலையில் பல ஆண்டுகளாக ஓட்டு கொட்டகையாக காட்சியளித்து வந்த கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியார் ஆலயத்திற்கு பதிலாக புதிய ஆலயம் கட்டுவதற்கு இலங்கை அரசு முன்வந்து புதிய ஆலயம் கட்டுவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் கச்சத் தீவிலேயே இலங்கை கடற்படையினர் நிரந்தரமாக தங்கி பாதுகாப்பு பணிகள் மேற்கொள்வதற்காக கடற்படை முகாம் கட்டி தொலை தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. கச்சத்தீவில் இலங்கை அரசு புதிதாக ஆலயம் மற்றும் முகாம் அமைத்து வருவதற்கு தமிழக மீனவர்கள் கடும் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.
இது பற்றி ராமேசுவரம் விசைப்படகு மீனவர் சங்க தலைவர் தேவதாஸ் கூறுகையில், கச்சத்தீவு ஒப்பந்தத்தை மீறி இலங்கை அரசு இந்திய அரசின் ஆலோசனையும், அனுமதியும் இல்லாமல் புதிதாக ஆலயம் கட்டிவருவதை தமிழக மீனவர்கள் வன்மையாக கண்டிக்கிறோம். எனவே இது குறித்து மத்திய அரசு வெளியுறவுத்துறை மூலம் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி அதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும். கச்சத்தீவில் நிரந்தரமாக கடற்படை முகாம் கட்டுவதையும் மத்திய-மாநில அரசுகள் இணைந்து உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என்றார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.