மோடியை மணமகள் விமர்சித்ததால் திருமணத்தை நிறுத்தினார் மணமகன். உ.பியில் சம்பவம்.
உத்தரபிரதேசம் மாநிலத்தில் வியாபாரி ஒருவருக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. அவருக்கு நிச்சயம் செய்யப்பட்ட பெண், மத்திய அரசு பணியில் உள்ளார்.
அவர்களது திருமணம் கான்பூரில் உள்ள ஒரு கோவிலில் நேற்று நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் இரவு மணமகன் குடும்பத்தினரும், மணமகள் குடும்பத்தினரும் கோவில் அருகில் உள்ள மண்டபத்தில் தங்கியிருந்தனர். அப்போது மணமகனும், மணமகளும் திருமண ஏற்பாடுகள் குறித்து பேசினார்கள்.
திருமணத்துக்கான செலவுகள் பற்றி அவர்கள் இருவரும் விவாதித்தனர். அப்போது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு இருப்பதால்தான் திருமண செலவுகள் அதிகரித்து விட்டதாக மணமகள் தெரிவித்தார். ஆனால் வியாபாரியான மணமகன் அதை ஏற்கவில்லை.
சில அத்தியாவசியப் பொருட்களின் உற்பத்தி குறைவு காரணமாக அவற்றின் வரத்து குறைந்து விலை உயர்ந்து விட்டது என்று மணமகன் விளக்கம் அளித்தார். அதற்கு மணமகள், “விலைவாசி உயர்வுக்கு பிரதமர் மோடியின் தவறான கொள்கை முடிவுகளே காரணம்“ என்றார். இதை கேட்டதும் மணமகனுக்கு கடும் கோபம் ஏற்பட்டது.
பிரதமர் மோடியின் தீவிர ஆதரவாளரான அவர், “இந்த விஷயத்தில் பிரதமர் மோடியை குறை சொல்லக் கூடாது” என்றார். அதோடு அவர் பிரதமர் மோடியை புகழ்ந்து பேசினார். இதை கேட்ட மணமகள் பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசினார்.
மேலும் “மோடியால் இந்த நாடு கெட்டு விட்டது” என்றும் மணமகள் கிண்டல் செய்தார். இதை கேட்டதும் மணமகன் கோபத்தின் உச்சிக்கே சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அந்த வாக்குவாதம் மணமகன், மணமகள் இடையே மேலும் உரசலை ஏற்படுத்தியது. இருவரும் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டனர். மோடி பற்றி தவறான எண்ணம் வைத்திருப்பதால் உன்னை திருமணம் செய்ய இயலாது என்று மணமகன் தடாலடியாக கூறினார்.
மணமகளும் பிடிவாதமாக மோடி பற்றி கூறிய கருத்தை திரும்ப பெற மறுத்தார். பிறகு அவர்கள் இருவரும் ஒருமித்த கருத்து இல்லாததால் பிரிய முடிவு செய்தனர்.
இதைத்தொடர்ந்து திருமணம் பாதியில் நிறுத்தப்பட்டது. இரு வீட்டாரும் சமரசம் செய்தபோதும் பிரதமர் மோடியை குறை சொன்னதால் அந்த பெண்ணை திருமணம் செய்ய மாட்டேன் என்று மணமகன் திட்டவட்டமாக கூறிவிட்டு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு சென்று விட்டார்
-அமுதவன்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.