sதேர்தல் பிரச்சாரம் சனிக்கிழமையுடன் முடிகிறது. தலைவர்களின் கடைசிக் கட்ட முயற்சிகள்.
தமிழக சட்டசபைக்கு வருகிற 16-ந் தேதி (திங்கட்கிழமை) தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 22-ந் தேதி தொடங்கி 29-ந் தேதி வரை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து கடந்த மே 2-ந் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
234 தொகுதிகளிலும் 3,776 பேர் போட்டியிடுகிறார்கள். தமிழக அரசியல் களத்தில் எப்போதும் இல்லாத அளவுக்கு 6 முனை போட்டி நிலவுகிறது. அனைத்து கட்சிகளும் தமிழகம் முழுவதும் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றன.
கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நடந்து வரும் தேர்தல் பிரசாரம் உச்சக்கட்டத்தை நெருங்கி உள்ளது. அரசியல் கட்சிகளின் அனல் பறக்கும் பிரசாரம் நாளை (சனிக்கிழமை) மாலை 6 மணியுடன் ஓய்கிறது.
நாளை மாலை 6 மணி முதல் 16-ந் தேதி மாலை 6 மணி வரை கருத்துக் கணிப்பு நடத்தவும், கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.
மேலும் நாளை முதல் 16-ந் தேதி வரை தேர்தல் தொடர்பான எந்த கூட்டங்களோ, ஊர்வலங்களோ நடத்தக்கூடாது என்றும் உத்தரவிடப்பட்டு உள்ளது. அத்துடன் சமூக வலைத்தளங்கள் மற்றும் குறுஞ்செய்திகள் மூலமாக பிரசாரம் செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது. ஒவ்வொரு தொகுதியிலும் வெளியூர்காரர்கள் தங்கி இருக்கக்கூடாது என்றும், வாக்காளர்கள் அல்லாதவர்கள் நாளை மாலை 6 மணிக்குப் பிறகு தொகுதியை விட்டு வெளியேறி விட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. மதுக்கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.
இதற்கிடையே ஓட்டுப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் செய்து முடித்து உள்ளது. தமிழகம் முழுவதும் உள்ள 5 கோடியே 82 லட்சம் வாக்காளர்களுக்காக சுமார் 66 ஆயிரம் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் பதற்றமான பகுதிகள் ஆய்வு செய்து பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது.
தேர்தல் ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்கவும் தேர்தல் கமிஷன் தீவிர நடவடிக்கைகள் எடுத்து இருக்கிறது. பணப்பட்டுவாடாவை தடுப்பதற்காக 234 தொகுதிகளிலும் 8 ஆயிரத்து 112 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தேர்தலை அமைதியாகவும் சுமுகமாகவும் நடத்துவதற்காக 30 ஆயிரம் துணை ராணுவத்தினர் தமிழ்நாட்டுக்கு வந்து உள்ளனர். அவர்கள் 234 தொகுதிகளிலும் தயார் நிலையில் இருக்கிறார்கள். அனைத்து ஓட்டுச்சாவடிகளுக்கும் உரிய மின்னணு எந்திரங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு இருக்கின்றன. வாக்குப்பதிவுக்கு மொத்தம் 1½ லட்சம் மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
ஓட்டுப்பதிவு திங்கட்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறும். அதன்பிறகு அனைத்து மின்னணு எந்திரங்களும் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.
19-ந் தேதி வாக்குகள் எண்ணப்படும். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கப்போவது யார்? என்பது அன்று மதியம் தெரிந்து விடும்.
இந்த நிலையில் கடைசிக் கட்ட முயற்சியாக பெரிய தலைவர்கள் அனைவரும் தீவிரப் பிரச்சாரத்தில் இறங்கி உள்ளனர். ஜெயலலிதா திடீரென்று வேனில் கிளம்பி சென்னையின் பல தெருக்களில் வீதி வீதியாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இது அவருடைய பயணத்திட்டத்தில் இல்லாத நிகழ்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.
கருணாநிதி இரண்டாவது முறையாக தான் போட்டியிடும் திருவாரூர் சென்று வேன் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
ஸ்டாலின் வீதி வீதியாக வேனில் போய்ப் பிரச்சாரம் செய்துகொண்டிருந்தவர் திடீரென்று வேனை விட்டு இறங்கி கால்நடையாக நடந்துசென்று சென்னை வீதிகளில் ஓட்டுக் கேட்டார். இதுமட்டுமின்றி யாரும் எதிர்பாராத விதமாக அபார்ட்மெண்ட் மாடிகளில் ஏறிச்சென்று அங்கிருந்த பெண்களிடம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
மக்கள் நலக்கூட்டணியின் முதல்வர் வேட்பாளர் விஜயகாந்தும் அறிவித்திருந்தபடி பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகிறார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.