ஜெ. சவப்பெட்டியுடன் வாக்கு சேகரிப்பது தரம் தாழ்ந்த பிரச்சாரம்: ஓபிஎஸ் அணிக்கு வீரமணி கண்டனம்
ஜெயலலிதாவின் மாதிரி உடலை சவப்பெட்டியில் வைத்து ஓ.பன்னீர்செல்வம் அணி வாக்கு சேகரிப்பது தரம் தாழ்ந்த பிரச்சாரம் என்று திராவிடர் கழகம் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ”மறைந்த முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மறைந்து, ஈரம் காயாத போதே ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக பதவி ஏற்றார். மவுனமாக இருந்துவிட்டு பதவி போனதும், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மர்மம் பற்றிய விசாரணை தேவை என்று சொல்கிறார்.
இன்று, இடைத்தேர்தலில் ஜெயலலிதாவின் சவப்பெட்டியுடன் வாக்கு சேகரிப்பது தரம் தாழ்ந்த பிரச்சாரம். மறைந்த தலைவருக்குச் செய்யும் அவமரியாதைப் பொங்கும் அவமானம் வேறு இருக்க முடியாது. ஓ.பன்னீர்செல்வம் அணி தேர்தலில் போட்டியிட்டு வாக்குச் சேகரிக்க எத்தனையோ வழிமுறைகள் உள்ளன. இந்த சவப்பெட்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க, அந்த கட்சி வேட்பாளர் தேர்தலுக்கு நிற்க தகுதிக் குறைவுடையவர் என்று செய்வதே நியாயமான நடவடிக்கையாக இருக்கும்” என்று வீரமணி கூறியுள்ளார்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.