பிரட் வகை ரொட்டிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயனப் பொருட்கள்.. விசாரணை நடத்த மத்திய சுகாதாரத்துறை உத்தரவு.
பிரபல நிறுவனங்களின் ரொட்டிகளில் புற்றுநோயை ஏற்படுத்தும் ரசாயன பொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த மத்திய சுகாதார மந்திரி ஜே.பி. நட்டா உத்தரவிட்டார்.
நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் பிரபல ரொட்டி நிறுவனங்களின் தயாரிப்பு தரம் குறித்து அண்மையில் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றின் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வு மேற்கொண்டது.
இதற்காக டெல்லியில் விற்பனை செய்யப்பட்ட பிரிட்டானியா, ஹார்வெஸ்ட் கோல்ட், கே.எப்.சி., பீசா ஹட், டொமினோஸ், சப்வே, மெக்டொனால்டு, சிலைஸ் ஆப் இத்தாலி உள்ளிட்ட 38 நிறுவனங்களின் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட ரொட்டி, ‘பன்’ போன்றவை ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
அப்போது, இந்த நிறுவனங்களின் ரொட்டி மற்றும் பன்களில் 84 சதவீத அளவிற்கு பல நாடுகளில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் ரசாயன பொருட்கள் என்று பட்டியலிடப்பட்ட பொட்டாசியம் புரோமேட் மற்றும் பொட்டாசியம் அயோடேட் போன்றவை இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த ஆய்வை மேற்கொண்ட அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தினர் கூறியதாவது:-
பிரபல நிறுவனங்களின் ரொட்டி மற்றும் பன் ஆகியவற்றில் மனிதர்களுக்கு புற்றுநோய் உருவாக காரணமாக கருதப்படும் 2பி கார்சினோஜென் ரசாயனப் பொருள் இருப்பதும் கண்டறியப்பட்டது.
இவற்றில் காணப்பட்ட இன்னொரு ரசாயனப் பொருள் தைராய்டு குறைபாடுகளை ஏற்படுத்துவது ஆகும். ஆனால் இவற்றின் பயன்பாடு இந்தியாவில் தடை செய்யவில்லை. எனவே பொட்டாசியம் புரோமேட் மற்றும் பொட்டாசியம் அயோடேட் ஆகியவற்றை ரொட்டிகளில் சேர்க்க தடை விதிக்கவேண்டும் என மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திடம் பரிந்துரை செய்து இருக்கிறோம்.
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
எனினும், தங்களுடைய ரொட்டி தயாரிப்புகள் எவற்றிலும், இந்த வகை ரசாயனப் பொருட்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை என்று பிரிட்டானியா, கே.எப்.சி., டொமினோஸ், மெக்டொனால்டு, சப்வே ஆகியவை மறுத்தன. மற்ற நிறுவனங்கள் உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை.
பிரபல நிறுவனங்களின் ரொட்டி தயாரிப்புகளில் புற்று நோயை உருவாக்கும் ரசாயன பொருட்கள் இருப்பதாக வெளி யாகி உள்ள தகவல் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுபற்றி மத்திய சுகாதார மந்திரி ஜே.பி. நட்டா கூறுகையில், ‘‘இந்த விஷயத்தை உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொண்டோம். இது தொடர்பாக உடனடியாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு எனது இலாகா அதிகாரிகளை கேட்டுக் கொண்டு இருக்கிறேன். இதுபற்றி பீதி கொள்ளத் தேவையில்லை. விரைவில் விசாரணை அறிக்கை வந்துவிடும்’’ என்று குறிப்பிட்டார்.
மத்திய அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் ஆய்வு முடிவு குறித்து மத்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் தலைமை செயல் அதிகாரி பவன் குமார் அகர்வால் உடனடியாக ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், ‘‘பொட்டாசியம் புரோமேட்டை உணவு பொருட்களில் சேர்க்கக் கூடாது என்று அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் பரிந்துரை செய்து உள்ளது. ஏற்கனவே இதை சேர்க்கை பட்டியலில் இருந்து அகற்றிவிட முடிவு செய்து இருக்கிறோம். இதுபற்றிய அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும். பொட்டாசியம் அயோடேட் பற்றி ஆய்வு நடத்தி வருகிறோம். இதுகுறித்தும் விரைவில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.