எம்.எல்.ஏ. மகன் கார் மோதி 3 பேர் பலி: மிதமிஞ்சிய போதையில் காரை ஓட்டிவந்த வீடியோ ஆதாரம் சிக்கியது
ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரில் உள்ள ஜன்பத் மார்க் பகுதி வழியாக கடந்த 2-ம் தேதி பின்னிரவு சுமார் 2 மணியளவில் வேகமாக வந்த ஒரு சொகுசு கார் அவ்வழியே வந்த ஒரு ஆட்டோ ரிக்ஷா மீது மோதியது. இதில் ஆட்டோவில் வந்த மூன்றுபேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
ஆட்டோ மீது மோதிய வேகத்தில் சாலையோரமாக நின்றிருந்த போலீஸ் வாகனத்தின் மீதும் கார் மோதியதில் இரண்டு போலீசார் காயமடைந்தனர். இதையடுத்து, காரை ஓட்டிவந்தவரை போலீசார் பிடித்து விசாரித்தபோது, பிடிபட்ட நபர் ராஜஸ்தான் மாநில சட்டசபையில் சுயேட்சை எம்.எல்.ஏ.வாக பதவி வகிக்கும் நந்த் கிஷோர் மாஹாரியாவின் மகன் சித்தார்த் மாஹாரியா என்பது தெரியவந்தது.
இதையடுத்து, சித்தார்த் மாஹாரியாவை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், சித்தார்த் மாஹாரியா மிதமிஞ்சிய போதையில் காரை ஓட்டுவந்து விபத்தை ஏற்படுத்தியதை நிரூபிப்பதற்கு தேவையான வலுவான வீடியோ ஆதாரம் போலீசாரிடம் சிக்கியுள்ளது.
விபத்து நடப்பதற்கு முன்தினம் மாலை 6 மணியளவில் ஜெய்பூர் நகரில் உள்ள மதுவிடுதிக்குள் நுழையும் சித்தார்த் மாஹாரியா, அங்கு விடியவிடிய மதுவருந்தும் வீடியோ காட்சியும், மிதமிஞ்சிய போதையில் அவர் தள்ளாடியபடி தனது சொகுசு காரின் டிரைவர் இருக்கையில் வந்தமரும் காட்சியும் அந்த பிரபல மதுவிடுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது.
இந்த காட்சிகளை எல்லாம் ஆதாரமாக வைத்து இவ்வழக்கில் சித்தார்த் மாஹாரியாவுக்கு அதிகபட்ச தண்டனை பெற்றுத்தரும் வகையில் போலீசார் துரிதமாக செயல்பட தொடங்கியுள்ளனர்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.