ஜெயலலிதாவுடன் பியூஸ் கோயல் சந்திப்பு;
டெல்லியில் இருந்து சென்னை வந்த மத்திய மின்சார துறை மந்திரி பியூஸ் கோயல் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழக சட்டசபை தேர்தலுக்கு பிறகு முதன் முறையாக சென்னை வந்து இருக்கிறேன். ‘ஐ.ஐ.டி.’யில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறேன்.
மின் துறையை வருங்காலத்திற்கு ஏற்றபடி தொழில்நுட்ப உதவியுடன் மேம்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்கான முயற்சியில் ஐ.ஐ.டி. மூலமாக ஆய்வு மேற்கொள்ள இருக்கிறோம்.
கடந்த 2 ஆண்டு மோடி ஆட்சியில் நாட்டில் மின்சார உற்பத்தி பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மின்சார வழித்தடங்கள் மூலமாக தென் மாநிலங்களுக்கு குறிப்பாக தமிழகத்துக்கு 24 மணி நேரமும் பற்றாக்குறை இன்றி மின்சாரம் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் அதற்கான ஒத்துழைப்பை மத்திய அரசு வழங்கும். 2020-ம் ஆண்டுக்குள் தென் மாநிலங்களுக்கு 18 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். அது கடந்த 2014-ம் ஆண்டை விட 21 சதவீதம் அதிகம்.
‘உதய்’ திட்டத்தில் தமிழகம் சேர்ந்தால் பொதுமக்கள் குறைந்த கட்டணத்தில் மின்சாரம் பெற முடியும். எனவே தமிழகத்தில் இத்திட்ட மேம்படுத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை சந்திக்க முடியவில்லை என ஏற்கனவே நீங்கள் கூறியிருந்தீர்களே? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “நீங்கள் வரலாறு பற்றி பேசுகிறீர்கள். நான் எதிர்காலம் பற்றி பேசுகிறேன். தமிழக முதல்-அமைச்சரை (ஜெயலலிதாவை) தற்போது சந்திப்பது ஒரு மரியாதை நிமித்தமானது என்றார்.
பின்னர் ஐ.ஐ.டி. வளாகத்தில் நடந்த கண்காட்சியில், சுற்றுச்சூழலுக்கு ஏற்ற தொழில்நுட்பம் சார்ந்த காட்சிப் பொருட்களைப் பார்வையிட்டார். சுற்றுச் சூழலுக்கு ஏற்ற தொழில்நுட்ப திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழலுக்கு உகந்த எல்.இ.டி. மின் விளக்கை அறிமுகப் படுத்தினார். சூரிய எரிசக்தியைப் பயன்படுத்தும் சுற்றுசூழலுக்கு ஏற்ற வீட்டை பார்வையிட்டார்.
மேலும் எரிசக்தியை சேமிக்கும் குளிர்ந்த நீர் சேகரிப்பு மற்றும் மின்கலப் பொறியியல் மற்றும் மின் வாகனங்களுக்கான மையத்திற்கு அடிக்கல் நாட்டி பேசினார். பின்னர் அங்கு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது, நாட்டில் மின்சார உற்பத்தியை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும், சூரிய ஒளி மின்சாரம் அதிகரித்திருப்பதாகவும் கூறினார்.
அதைத்தொடர்ந்து முதலமைச்சர் ஜெயலலிதாவை அவரது போயஸ் தோட்ட இல்லத்தில் பியூஷ் கோயல் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, மத்திய அரசின் உதய் திட்டம், பசுமை வழித்தடம் உருவாக்குதல் ஆகியவை குறித்து பேசப்பட்டதாக தெரிகிறது.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.