கச்சத்தீவில் ஸ்ரீலங்கா இன்னொரு தேவாலயம் கட்டுவதை மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் – வைகோ கோரிக்கை.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
இந்திய விடுதலைக்குப் பின்னர் இந்திரா காந்தி காலத்தில் மத்திய அரசு 1974-ம் ஆண்டு, கச்சத்தீவை இலங்கை அரசுக்கு தாரை வார்த்தது. அன்று தமிழக முதல்வர் கருணாநிதி மத்திய அரசுக்கு துணையாக இருந்து தமிழ மக்களுக்கு துரோகம் செய்தார். கச்சத்தீவை இலங்கைக்குக் கொடுத்தபோது, போடப்பட்ட ஒப்பந்தத்தில், தமிழக மீனவர்கள் அங்கு மீன் பிடிக்கும் மரபு உரிமையும், மீன்பிடி வலைகளை உலர்த்தவும் அனுமதிக்கப்படுவர் என்று கூறப்பட்டது.
ஆனால், கடந்த முப்பது ஆண்டு காலமாக இலங்கை அரசின் கடற்படை, தமிழக மீனவர்களை எல்லை கடந்து வந்து தாக்குதல் நடத்தி வருகிறது. கச்சத்தீவு அருகில் செல்லும் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதும், மீன்பிடி கருவிகளையும் பறித்து வருவதும் அன்றாட நிகழ்வுகள் ஆகிவிட்டன.
இந்நிலையில், இலங்கை அரசு கச்சத்தீவில் ஒரு கோடி ரூபாய் செலவில் புதிய கிறிஸ்தவ தேவாலயம் கட்டுவதற்காக அடிக்கல் நாட்டு விழாவை நடத்தி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் வடக்கு மாகாண கடற்படை தளபதி பியல் டிசில்வா மற்றும் கடற்படை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பாக இலங்கை கடற்படை தளபதி ரவீந்திர விஜயகுணரத்னே வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத்தீவில் புதிய தேவாலயம் அமைக்கவும், அப்பகுதியை முழுமையாக கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறி உள்ளார்.
இலங்கை அரசு கச்சத்தீவில் கிறிஸ்தவ தேவாலயம் அமைப்பதின் நோக்கம், கச்சத்தீவை தங்கள் கட்டுப்பாட்டில் முழுமையாக வைத்துக்கொள்வதுடன், தமிழக மீனவர்கள் அங்கு செல்வதை தடுப்பதும்தான் என்பது திட்டவட்டமாக வெளிப்பட்டு இருக்கிறது. மேலும் கச்சத்தீவில் உள்ள அந்தோணியார் கோவில் திருவிழாவுக்கு தமிழக மீனவர்கள் சென்று வருவதை முற்றாக தடை செய்யவும் இலங்கை அரசு, இதன் மூலம் முயற்சிக்கிறது.
தமிழக மீனவர்கள் கச்சத்தீவுக்கு சென்று வரும் உரிமையை இலங்கை அரசு திட்டமிட்டுப் பறிப்பதை மத்திய பா.ஜ.க. அரசு வேடிக்கை பார்க்கக் கூடாது.
எனவே இலங்கை அரசு, கச்சத்தீவில் கிறிஸ்தவ தேவாலயம் அமைக்கும் திட்டத்தை இந்திய அரசு தடுத்து நிறுத்துவதுடன், 1974 ஆம் ஆண்டு அந்நாட்டுடன் செய்துகொண்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்துச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.