பாலாறு அணை தொடர்பான விவாதத்தில் சட்டமன்றத்தில் கூச்சல் குழப்பம். திமுக வெளிநடப்பு.
பாலாற்றில் ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் விவகாரம் தொடர்பாக சட்டசபையில் திமுக, அதிமுக இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திமுகவினர் அமளியில் ஈடுபட்டதால் சட்டசபையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.
”ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவது தொடர்பாக ஒத்திவைப்பு தீர்மானத்தை தங்களிடம் அளித்திருந்தேன். இது தொடர்பாக பேச வேண்டும்” என்று ஸ்டாலின் கூறினார்.
இதில் குறுக்கிட்ட சபாநாயகர், இந்த விவகாரம் தொடர்பாக நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. அதற்கு பாதகமாக பேச வேண்டாம் எனக் கூறினார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் எழுந்து நின்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், சபாநாயகர் குறுக்கிட்டு, திமுக உறுப்பினர்களை அமரும்படி கூறினார். ஆனால் திமுக உறுப்பினர்கள் ஸ்டாலினை பேச அனுமதிக்குமாறு கூச்சல் போட்டனர்.
இதனை தொடர்ந்து ஸ்டாலின் பேசுகையில், ‘கர்நாடக மாநிலத்தில் பாலாறு தோன்றி 93 கி.மீ. கர்நாடகத்தில் பயணித்து ஆந்திர மாநிலத்தில் நுழைந்து அங்கேயும் 33 கி.மீ. பயணித்து தமிழகத்தில் 222 கி.மீ. பாய்ந்து சென்று இறுதியாக வங்க கடலில் கலக்கிறது. பாலாறை பொறுத்தவரை பெரும்பாலும் தமிழகத்தில்தான் பயணிக்கிறது. இதனால் வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை உள்ளிட்ட 3 மாவட்டங்கள் பயனடைகின்றன.
இது மட்டுமின்றி திருவள்ளூர், சென்னை மாவட்டங்களிலும் மிகப்பெரிய நீராதாரமாக இந்த பாலாறு உள்ளது. மேலும் 4000 ஏக்கர் விவசாயத்தை நம்பி தமிழக விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் கல்பாக்கம் அணுமின் நிலையம் பாலாற்றை நம்பிதான் உள்ளது.
1982 ஆம் ஆண்டு மதராஸ் – மைசூர் ஒப்பந்தத்தின்படி அட்டவணை-7-ல் குறிப்பிட்டது போல பாலாறு பாய்ந்து செல்லும் மாநிலங்களுக்கிடையே எந்த ஒருவித முன் அனுமதியும் இன்றி புதிய அணை கட்டுவதோ, அணை தொடர்பான கட்டுமான பணி மேற்கொள்வதோ, நீரை தேக்குவதோ, திருப்புவதோ இது போன்ற செயல்களில் ஈடுபட ஆந்திர அரசால் ஈடுபட முடியாது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை மீறி ஆந்திர அரசு தடுப்பணை கட்டும் பணியை கடந்த 2006-ம் ஆண்டே மேற்கொண்டது. அப்போது ஆட்சியில் இருந்த நீங்கள் 10.02.2006-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தீர்கள்.
அதன் பின்னர் மே 2016-ம் ஆண்டு அதிமுக ஆட்சி வந்தது’ என ஸ்டாலின் பேசி கொண்டிருக்கும் போது சபாநாயகர் குறுக்கிட்டு ஸ்டாலினை ஒரு நிமிடம் அமரும்படியும், அவை முன்னவர் இதற்கான விளக்கம் அளிக்க வேண்டும் என ஓ. பன்னீர் செல்வத்தை பேச அழைத்தார்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சட்டசபையில் எழுந்து நின்று திமுக உறுப்பினர்கள் அனைவரும் எதிர்க்கட்சி தலைவரை பேச விடு என கோஷங்களை எழுப்பினர். ஆனால் சபாநாயகர் தொடர்ந்து அனுமதி மறுத்ததுடன், அவை முன்னர் பேசிய பின்னர் மீண்டும் எதிர்க்கட்சி தலைவர் பேச அனுமதி வழங்கப்படும் என உறுதி அளித்தார். தொடர்ந்து திமுக உறுப்பினர்கள் கூச்சல் எழுப்பியபடி இருந்தால் அவை முன்னவர் ஓ. பன்னீர் செல்வம் பேச முடியாமல் சட்டசபையில் கடும் சலசலப்பு ஏற்பட்டது.
இதனிடையே, சபாநாயகர் குறுக்கிட்டு என்னை சபை நடத்த நீங்கள் வழிகாட்ட முடியாது. சட்ட விதிகளுக்கு முற்பட்டே சபையை நடத்துவோம். இல்லையேல் நீங்கள் எவ்வளவு கூச்சல் போட்டாலும், கத்தினாலும் என்னுடைய முடிவில் மாற்றம் கிடையாது.
அவை முன்னர் பேசிய பின்னரே எதிர்க்கட்சி தலைவரை பேச அனுமதிப்பேன் என்றார். சுமார் 20 நிமிடம் இதுபோன்ற காரசார விவாதத்தை தொடர்ந்து சபாநாயகரிடம் துரைமுருகன், சக்கரபாணி ஆகியோர் சென்று ஸ்டாலினை பேச அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
சபாநாயகர் ஸ்டாலின் பேச அனுமதி தருகிறேன். ஆனால் அவை முன்னர் பேசி பின்னரே பேச அனுமதி வழங்கப்படும் என்று கூறினார். எதிர்க்கட்சி தலைவர், எதிர்க்கட்சி துணை தலைவர், கொறடா ஆகிய 3 பேர் கூறியும் திமுக உறுப்பினர்கள் கட்டுப்பட மறுக்கிறீர்கள். நீங்கள் யார் கட்டுப்பாட்டில் உள்ளீர்கள் என்றே தெரியவில்லை என்று சபாநாயகர் கூறியதற்கு திமுக உறுப்பினர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். இதனால் சபையில் கடும் அமளி ஏற்பட்டது.
இதற்கு விளக்கம் அளித்த சபாநாயகர் நான் தவறுதலாக எதுவும் கூறவில்லை. ஒன்று உறுப்பினர் என்ற அடிப்படையில் எனக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும். இல்லை என்றால் கொறடா அல்லது எதிர்க்கட்சி தலைவருக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும். ஆனால் நீங்கள் உங்கள் தலைவருக்கும், எனக்கும் கட்டுப்பட மறுக்கிறீர்கள். ஆகவே தான் அவ்வாறு கூறினேன் என்றார்.
இதை தொடர்ந்து துரைமுருகன் எழுந்து நின்று திமுக உறுப்பினர்களை சமாதானப்படுத்தி அமர வைத்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.