தொடர் மழையால் சென்னை மக்களை மீண்டும் மிரட்ட தயாராகும் செம்பரம்பாக்கம் ஏரி.
சென்னை மக்களின் தாகம் தீர்க்கும் ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரி, கடந்த ஆண்டு சென்னை மக்களை வெகுவாக பாதித்து விட்டது.
கடந்த ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதத்தில் பெய்த தொடர் மழையால் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி வழிந்தது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நீரும், பல்வேறு இடங்களில் இருந்து வந்த மழைநீர், பிற ஏரிகளில் இருந்து வெளியான உபரிநீர் ஆகிய அனைத்தும் ஒன்று சேர்ந்து அடையாறு ஆற்றில் வெள்ளமாக பெருக்கெடுத்து ஓடியது.
சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம் முடிச்சூர், பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, அனகாபுத்தூர், பொழிச்சலூர், சைதாப்பேட்டை, கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் தங்கள் உடமைகளை இழந்து, வீடுகளை இழந்து திருமண மண்டபங்கள், உறவினர்கள் வீடுகளில் அகதிகள் போல் தஞ்சம் அடைந்தனர். உயிர் தேசமும் ஏற்பட்டது. ராணுவத்தினர் வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர்.
தற்போதுதான் மக்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த சம்பவத்தை மறந்து இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்து உள்ளனர்.
இந்தநிலையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால் செம்பரம்பாக்கம் ஏரி கடல் போல் காட்சி அளிக்கிறது.
காற்றும் பலமாக வீசுவதால் செம்பரம்பாக்கம் ஏரியில் அலைகள் எழும்பி கரையை வந்து தொடுகின்றன. இதனை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பொதுமக்கள் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வந்து பார்த்து செல்கின்றனர்.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கன அடி. ஏரியின் நீர் மட்டம் 24அடி. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏரியின் பாதுகாப்பு கருதி நீர் மட்டம் 21 அடி வந்தவுடன் உபரி நீர் திறந்து விடப்படும்.
தற்போது ஏரியின் நீர் மட்டம் உயரம் 19.44 அடி உள்ளது. நீர் கொள்ளளவு 2,474 மில்லியன் கனஅடியாக உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 979 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது. தொடர் மழை காரணமாக ஏரியின் நீர் மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.
தொடர்ந்து இதே போல் கன மழை பெய்து வருவதால் ஸ்ரீபெரும்புதூர், நேமம் உள்ளிட்ட ஏரிகள் நிரம்பி அதில் இருந்து உபரி நீர் திறந்து விடும் சூழல் ஏற்பட்டால் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து விரைவில் 21 அடியை எட்டிவிடும்.
இதன் காரணமாக கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை புறநகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மீண்டும் செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பி அதில் உள்ள தண்ணீரை திறந்து விட்டு விடுவார்களோ? என்று அவர்கள் பயத்தில் உள்ளனர். பலர் தற்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கி விட்டனர். தங்கள் வீட்டுக்குள் தண்ணீர் புகாத வண்ணம் தடுப்புகளை ஏற்படுத்தியதுடன், வீட்டில் உள்ள பெரியவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்சென்று விட்டனர்.
கடந்த ஆண்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சைதாப்பேட்டை உள்பட சென்னை புறநகர் பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், செம்பரம்பாக்கம் ஏரியின் தற்போதைய நிலை என்ன? என்று நேரில் வந்து பார்த்து விட்டு செல்கின்றனர்.
இதுபற்றி அவர்கள் கூறும்போது, “நாங்கள் சைதாப்பேட்டையில் இருந்து வருகிறோம். கடந்¢த ஆண்டு பெய்த மழையால் ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரால் எங்கள் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்து எங்கள் உடமைகளை இழந்து விட்டோம். தற்போது பெய்து வரும் மழையால் மீண்டும் எங்களை மிரட்ட செம்பரம்பாக்கம் ஏரி தயாராகி விட்டதா? என்று ஏரியின் நிலையை நேரில் பார்த்து செல்வதற்காக வந்தோம்” என்றனர்.
கடந்த ஆண்டு மழை வெள்ளத்தின் போது ஏரிக்கரையின் மீது வாகனங்கள் செல்லும் சாலையின் ஒரு பகுதியில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்த கற்கள் சரிந்து விட்டதால் அந்த கற்களை அகற்றி விட்டு அந்தப் பகுதியில் புதிதாக சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
ஏரிக்கரையின் மதகு பகுதிகளிலும் அரிப்பு ஏற்பட்டது. அவற்றை தற்காலிகமாக மண் மூட்டைகளை கொண்டு அடுக்கி சரி செய்யும் பணி நடந்தது. ஆனால் அந்த பணிகள் இன்னும் முடியாமல் அப்படியே உள்ளது. தற்போது மீண்டும் பெய்து வரும் தொடர் மழையால் ஏரிக்கரை மீது உள்ள அரிப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் சூழல் ஏற்பட்டு உள்ளது.
கன மழை தொடர்வதால் சென்னை மக்களை மீண்டும் மிரட்ட செம்பரம்பாக்கம் ஏரி தயாராகி வருவதாகவே பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.