பணப்பட்டுவாடா காரணமாக ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ஆர்.கே.நகர் தொகுதியில் வருகிற 12-ந்தேதி தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் ஆணையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது. இடைத்தேர்தல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு ஆர்.கே.நகரில் பலமுனை போட்டி ஏற்பட்டுள்ளது. 62 பேர் களத்தில் உள்ளனர். அ.தி.மு.க.வை சேர்ந்த 2 அணிகளுக்கும் (சசிகலா- ஓ.பி.எஸ். அணி) தி.மு.க.வுக்கும் இடையே அங்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக தேர்தல் கமிஷனுக்கு ஏராளமான புகார்கள் சென்றன. இதையடுத்து அங்கு பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி பணப்பட்டுவாடாவை தடுக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.
ஆனால் தேர்தல் அதிகாரிகளின் கண்ணை மறைத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓட்டுக்கு ரூ.4 ஆயிரம் பணம் வெட்டவெளிச்சமாக வினியோகம் செய்யப்பட்டது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், பணப்படுட்டுவாடா செய்யப்பட்டது குறித்து தேர்தல் ஆணையத்தின் சிறப்பு கூட்டம் தலைமை தேர்தல் அதிகாரியான நஜீம் ஜைதி தலைமையில் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை ரத்து செய்வதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக பணப்பட்டுவாடா செய்யப்பட்டது எப்படி என்பதை கண்டுபிடிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. நேற்று முன்தினம் தமிழக சுகாதாரத்துறை அமைச்சரும், டி.டி.வி.தினகரனின் தீவிர ஆதரவாளருமான விஜயபாஸ்கரின் வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் வருமானவரி துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகளும், ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடா செய்வதற்கான டோக்கன்களும் பறிமுதல் செய்யப்பட்டன. அமைச்சர் விஜயபாஸ்கரின் உதவியாளர்களிடமிருந்து ரூ.3 கோடிக்கும் மேல் ரொக்கப் பணம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 12-ந்தேதி நடைபெற இருந்த ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் தேர்தல் நடத்தப்படுவது குறித்த அறிவிப்பை தேர்தல் ஆணையம் வெளியிடும் என தெரிவித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.