‘ரான்சம்வேர்’ரை தொடர்ந்து கம்ப்யூட்டரை அச்சுறுத்த வந்துள்ள அடுத்த வைரஸ்
உலகமெங்கும் உள்ள தொழில்நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களை பதம் பார்த்துள்ள ‘ரான்சம்வேர்’ வைரஸை தொடர்ந்து ’உய்விஸ்’ என்ற மற்றொரு வைரஸ் தாக்குதலை நடத்த இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது.
டெக் உலகின் அசுரர்களாக தற்போது உருவெடுத்துள்ள ’வன்னாக்ரை’ ஹேக்கிங் குழுவினர் இ-மெயில் மூலமாக ஹேக்கிங் மால்வேரை ஒருவரது கம்ப்யூட்டருக்கு அனுப்புகின்றனர். கம்ப்யூட்டரை இயக்கும் நபர் விபரமின்றி அந்த இ-மெயிலை திறக்கும் போது அந்த மால்வேரானது கம்ப்யூட்டரில் உள்ள தகவல்களை ஹேக் செய்து விடுகிறது.
குறிப்பிட்ட அளவு பணம் தரும் பட்சத்தில் திருடப்பட்ட தகவல்களை திரும்ப அளிப்போம், இல்லையெனில் அந்த தகவல்களை அழித்துவிடுவோம் எனவும் அக்குழுவினர் எச்சரிக்கை செய்தி வெளியிட்டுள்ளனர். இந்த ‘ரான்சம்வேர்’ வைரஸின் தாக்குதலுக்கு உலகமுழுவதுமுள்ள மருத்துவமனைகள், தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்கள் தப்பவில்லை.
அனைத்து நாடுகளிலும் உள்ள இணைய பாதுகாப்பு அமைப்புகள் இத்தாக்குதலில் இருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்த வழிமுறைகளை வெளியிட்டு வருகின்றன. இருப்பினும் இந்த வைரஸ் தாக்குதலால் பல்லாயிரக்கான நிறுவனங்கள் தங்களது வழக்கமான பணிகளை நிறுத்தி வைத்துள்ளதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்களை இழந்துள்ளது.
இந்நிலையில், ரான்சம்வேர் தாக்குதலிலிருந்தே இன்னும் முழுமையாக மீளாத நிலையில், இதே போன்ற அம்சங்களை உடைய ‘உய்விஸ்’ (UIWIX ) என்னும் மற்றொரு புதிய வைரஸ் உலகமெங்கும் உள்ள கம்ப்யூட்டர்களை தாக்கும் அபாயம் இருப்பதாக, சீனாவின் அவசர நிலை செயல்திட்ட மையம் தெரிவித்துள்ளது.
ரான்சம்வேர் போலவே இதுவும் விண்டோஸ் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில் உள்ள குறைகளை பயன்படுத்தியே கம்ப்யூட்டரில் ஊடுருவுகிறது. வைரஸால் தாக்கப்பட்ட கோப்புகளை .uiwix என்னும் ஃபார்மட் கோப்புகளாக மாற்றிவிடும். ஆனால், இதுவரை இந்த வைரசால் எந்த விதமான தாக்குதலும் கண்டறியப்படவில்லை. இருந்தபோதிலும் அவசரநிலை செயல்திட்ட மையமானது உஷார் நிலையில் உள்ளது என்று சீனா தெரிவித்துள்ளது.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.