மந்திரியுடன் மோதல் ; பெண் டிஎஸ்பி அனுபமாவின் ராஜினாமா ஏற்பு.
கர்நாடக மாநிலம், பெல்லாரி மாவட்டம், கூட்லகியில் போலீஸ் துணை சூப்பிரண்டாக பணியாற்றியவர் அனுபமா செனாய். இவருக்கும் மாநில தொழிலாளர் நலத்துறை மந்திரியும், பெல்லாரி மாவட்ட பொறுப்பு மந்திரியுமான பரமேஸ்வர் நாயக்குக்கும் சில மாதங்களாக மோதல் ஏற்பட்டு வந்தது.
பெல்லாரி மாவட்டத்தில் சுரங்க மாபியா கும்பல் மற்றும் மது வியாபாரிகள் மீது அதிரடியாக நடவடிக்கை எடுத்ததால் அரசியல் தலையீட்டின் பேரில் மந்திரியின் பகைக்கு அனுபமா இலக்கானதாக கூறப்படுகிறது.
2 மாதங்களுக்கு முன்பு பெண் டி.எஸ்.பி. அனுபமா மீது மந்திரி பரமேஸ்வர் நாயக் ஒரு குற்றச்சாட்டை கூறினார். அவரை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முடியவில்லை. தான் பேசினால் முறையாக பதில் அளிப்பதில்லை. அவரை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மந்திரி கூறியிருந்தார்.
இதனால் கோபமான அனுபமா கடந்த 4-ந் தேதி தனது பணியை ராஜினாமா செய்வதாக கூறி கடிதம் கொடுத்துவிட்டு தலைமறைவானார். இருப்பினும், ராஜினாமா கடிதம் தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரிகள் இன்னும் எந்த முடிவையும் எடுக்கவில்லை.
மந்திரி பரமேஸ்வர் நாயக் மற்றும் கூட்லகி பகுதியை சேர்ந்த மதுபானம்-மணல் மாபியாக்கள் ஆகியோர் அனுபமா செனாயின் பணிக்கு இடையூறு செய்து தொல்லை கொடுத்தது தான் அவருடைய ராஜினாமாவுக்கு காரணம் என கூறப்படுகிறது. இந்த குற்றச்சாட்டை மந்திரி பரமேஸ்வர் நாயக் மறுத்துள்ளார்.
இதற்கிடையே, ‘அனுபமாவின் ராஜினாமாவை ஏற்க வேண்டாம். அவரை சமாதானப்படுத்துங்கள்’ என போலீஸ் டி.ஜி.பி. ஓம் பிரகாஷிடம் முதல்-மந்திரி சித்தராமையா அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அனுபமா செனாய் எங்கு இருக்கிறார்? என்பது குறித்து அறிய ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது.
நேற்று முன்தினம் பெல்லாரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சேத்தன், அனுபமாவின் சொந்த கிராமத்திற்கு சென்று அவருடைய குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதன் தொடர்ச்சியாக 5 நாட்களுக்கு பிறகு நேற்று அதிகாலையில் அனுபமா செனாய், கூட்லகிக்கு வந்தார். ஆனால் அவர் போலீஸ் சூப்பிரண்டை சந்திக்க மறுத்துவிட்டார்.
இதற்கிடையே, அனுபமா செனாய் தங்கியிருந்த அறை முன்பு திரண்ட அந்தப்பகுதி பொதுமக்கள் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் மந்திரி பரமேஸ்வர் நாயக்கிற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அனுபமா செனாய் தனது ராஜினாமாவை வாபஸ் பெற்று மீண்டும் பணியில் சேர வேண்டும் என்றனர்.
மாநில மந்திரிக்கும், பெண் போலீஸ் அதிகாரிக்கும் இடையிலான இந்த மோதல் போக்கு கர்நாடக மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அனுபமாவின் ராஜினாமா ஏற்கப்பட்டதாக கர்நாடக மாநில போலீஸ் டி.ஜி.பி. ஓம் பிரகாஷ் இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.