நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை மீண்டும் ஆரம்பிக்க காங்கிரஸ் முடிவு.
மறைந்த முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு ‘‘நேஷனல் ஹெரால்டு’’ என்ற பத்திரிகையை கடந்த 1938-ம் ஆண்டு தொடங்கினார். இந்த பத்திரிகை தற்போது வெளிவரவில்லை. இதை காங்கிரஸ் கட்சி கடந்த 2010–ம் ஆண்டு விலைக்கு வாங்கியது. இதற்காக காங்கிரஸ் கட்சி நிதியில் இருந்து கணிசமான தொகை வழங்கப்பட்டது.
நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு சொந்தமான ரூ.2,000 கோடி சொத்துக்களை கைப்பற்றவே காங்கிரஸ் நிதியை சோனியாகாந்தி, ராகுல்காந்தியும் தவறாக பயன்படுத்தினார்கள் என்று குற்றம் சாட்டப்பட்டது.
இதுதொடர்பாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார். மேலும், பத்திரிகையை வாங்கியதற்கு சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்தது தொடர்பாக அமலாக்கத் துறையினரும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நேஷனல் ஹெரால்டு பத்திரிக்கையை 8 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்குவதற்கு காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.
இதற்காக அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நிதிச் சுமை காரணமாக நேஷனல் ஹெரால்டு மற்றும் அதனுடன் கூடிய இரண்டு பத்திரிகைகள் 8 வருடங்களுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொருளாளரும், நேஷனல் ஹெரால்டு உள்ளிட்ட மூன்று பத்திரிகைகளின் வியாபார இயக்குநருமாகிய மோதிலால் வோரா கூறுகையில்:-
நேஷனல் ஹெரால்டு, குவாமி அவாஸ்(உருது) மற்றும் நவ் ஜீவன்(ஹிந்தி) ஆகிய பத்திரிகைகளை புதுப்பிக்க உத்தேசித்துள்ளோம். இதற்கான முடிவு கடந்த ஜனவரி மாதம் எடுக்கப்பட்டது. தற்போது தொடங்குவதற்கான இறுதி கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.