ஜெயலலிதா பிரச்சாரக் கூட்டங்களில் தொடரும் சாவுகள் ;பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு. நடவடிக்கை எடுக்கவேண்டும் என தேர்தல் கமிஷனுக்குத் தலைவர்கள் கோரிக்கை.
ஜெயலலிதாவின் பிரச்சாரக் கூட்டத்தில் தொண்டர்கள் உயிரிழந்தது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சேலத்தில் நேற்று முதல்– அமைச்சர் ஜெயலலிதா பங்கேற்ற அ.தி.மு.க. தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கடும் வெயில் கொடுமைக்கு தாக்குபிடிக்க முடியாமல் இரண்டு பேர் சுருண்டு விழுந்து உயிரிழந்த கொடுமை தமிழகத்தில் மிகப் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாநகரில் 108 டிகிரி கொளுத்தும் வெயில் நிலவுவதால் பொதுமக்கள் யாரும் வெளியில் வர வேண்டாமென்று கலெக்டர் விடுத்த எச்சரிக்கையை மீறி காலை 11 மணியிலிருந்து மாலை 3 மணி வரை, 4 மணி நேரம் வெயிலில் காக்க வைத்ததால் இந்த விபரீத கொடுமை நிகழ்ந்துள்ளது.
ஏற்கனவே விருத்தாச்சலம் சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து வெயிலில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை தற்போது ஐந்தாக உயர்ந்துள்ளது.
ஒவ்வொரு கூட்டத்திலும் உயிரிழப்புகளும், நூற்றுக்கணக்கானவர்கள் காயமடைகிற அவலநிலை தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுகுறித்து தேர்தல் ஆணையமோ, காவல் துறையோ கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஜெயலலிதாவின் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறவர்களின் உயிரிழப்பை தடுத்து நிறுத்த தேர்தல் ஆணையமும், காவல்துறையும் தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
எனவே, அப்பாவி மக்களின் உயிரிழப்புகளை தடுப்பதற்காக ஜெயலலிதாவின் பிரச்சார கூட்டத்திற்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும் உடனடியாக தடைவிதிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன். இத்தகைய தடையின் மூலமாகத்தான் அப்பாவி மக்களின் உயிரிழப்புகளை தடுக்க முடியும். இந்த தடையை உடனடியாக விதிக்கவில்லையெனில் நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் உயிரிழப்புகளுக்கு தேர்தல் ஆணையமும், காவல்துறையும்தான் பொறுப்பேற்க வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் நேற்று நடைபெற்ற அ.தி.மு.க. பொதுச்செயலர் ஜெயலலிதாவின் பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்றவர்களில் இருவர் வெயில் கொடுமை தாங்க முடியாமலும், நெரிசலில் சிக்கியும் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த செய்திகளை அறிந்து பேரதிர்ச்சியும், வருத்தமும், தாங்க முடியாத வேதனையும் அடைந்தேன்.
இதற்கு முன்பே கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் கடந்த 11ஆம் தேதி நடந்த பரப்புரைக் கூட்டத்தில் வெயில் மற்றும் நெரிசலில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். அதிலிருந்தாவது அ.தி.மு.க.வினர் வெயில் கொளுத்தும் வேளையில் பரப்புரைக் கூட்டங்களை நடத்துவதை தவிர்த்திருக்க வேண்டும். ஆனால்,அவ்வாறு நடக்க வில்லை. குறைந்த பட்சம் பொதுக்கூட்டத்திற்கு 4 மணி நேரம் முன்னதாகவே மக்களைக் கொண்டு வந்து அடைத்து வைப்பதையாவது தவிர்த்திருக்க வேண்டும். அதற்கும் ஆளுங்கட்சி மற்றும் அதன் நிர்வாகிகள் தயாராக இல்லை. அதன் விளைவு தான் ஒரு தனிநபருக்குக்காக இரு அப்பாவிகளின் விலைமதிப்பற்ற உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கின்றன.
பொதுமக்களை அழைத்து வந்து சுட்டெரிக்கும் வெயிலில் அடைத்து வைப்பதை சாதாரண விதிமீறலாக பார்க்க முடியாது; மாறாக அப்பாவி ஏழை மக்களின் உயிர்களுக்கு தெரிந்தே, திட்டமிட்டே ஆபத்தை ஏற்படுத்தியதாகத்தான் பார்க்க வேண்டும்.
பகலில் சுட்டெரிக்கும் வெயிலில் பரப்புரைக் கூட்டங்கள் நடத்துவதை அரசியல் கட்சிகள் தவிர்க்க வேண்டும். பெரிய அளவில் பொதுக் கூட்டங்கள் நடத்தப்படும் போது அதற்காக அழைத்து வரப்படும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதா? என்பதை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து அதன்பிறகே அனுமதி தர வேண்டும்; கூட்டத்தின் போதும் தேர்தல் ஆணையம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.