நாடு முழுவதும் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.30 லட்சம் டன் பருப்பு வகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
பருவமழை பொய்த்ததன் காரணமாக பருப்பு சாகுபடி குறைந்துள்ளது. இதனால் வெளிச்சந்தையில் பருப்பு வகைகள் சராசரியாக கிலோவுக்கு ரூ.180 முதல் ரூ.200 விலைக்கு விற்கப்படுகிறது. தற்போதைய நிலவரத்தை பயன்படுத்தி சில வணிகர்கள் பருப்பு வகைகளை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்க திட்டமிட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து நாடு முழுவதும் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த சில மாதங்களில் மட்டும் ஹரியாணா, உத்தரப் பிரதேசம், புதுடெல்லி மற்றும் வடஇந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோதமாக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1.30 லட்சம் டன் பருப்பு வகைகளை உணவுத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
பருப்பு விலை உயர்வு குறித்து உணவுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: நாட்டின் பருப்பு வகைகளின் தேவை 2.4 கோடி டன்னாக உள்ளது. ஆனால் தற்போது 1.7 கோடி டன் மட்டுமே விநியோகம் செய்யப்படுகிறது. எனவே தட்டுப்பாடு காரணமாக விலை உயர்ந்துள்ளது.
பதுக்கல் பருப்பை பறிமுதல் செய்து சந்தையில் விநியோகம் செய்வதன் மூலம் விலையைக் குறைக்க முடியும் என்று நம்புகிறோம். ஒரு கிலோ பருப்பு ரூ.50 விலையில் விற்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது.
அரசு மற்றும் தனியார் சார்பில் வெளிநாடுகளில் இருந்து பருப்பு இறக்குமதி செய்யப்படுகிறது. மத்திய அரசு சார்பில் தமிழகம், ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களுக்கு 10 ஆயிரம் டன் பருப்பு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.