கரூரில் பணம் பதுக்கிய அன்புநாதன் சுலபமாக முன்ஜாமீன் பெற்றார்.
கரூர் மாவட்டம் அய்யம்பாளையம் பிரிவு சாலையில் அதிமுக முக்கிய பிரமுகரான அன்புநாதனுக்கு சொந்தமான குடோனில் ஆம்புலன்சில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணத்தை ஏற்றிக் கொண்டிருப்பதாக கடந்த ஏப்ரல் 22ல் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் கரூர் மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டே தலைமையில் அதிரடிப்படை போலீசார் மற்றும் அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதி தேர்தல் பறக்கும் படையினர் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் பணம் கட்டுக்கட்டாக சிக்கியது. ஆம்புலன்ஸ், 12 பணம் எண்ணும் இயந்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அய்யம்பாளையம் ஊருக்குள் உள்ள அன்புநாதன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனையிட்டனர். அங்கு சுமார் ரூ.5 கோடி வரை இருந்தது.
முன்ஜாமீன் வழங்கக்கோரி, ஐகோர்ட் மதுரை கிளையில் அன்புநாதன் மனு செய்தார். இந்த மனு விடுமுறை கால நீதிபதி பி.என்.பிரகாஷ் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் மூத்த வக்கீல் ரமேஷ் ஆஜராகி, ‘மனுதாரருக்கும் நடந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை. மனுதாரர் தொழிலதிபர். எனவே, அவருக்கு முன்ஜாமீன் வழங்க வேண்டும்’ என்றார்.
அரசு வக்கீல் ஏ.பி.பாலசுப்ரமணியன் ஆஜராகி, `ரூ.10 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தனிப்படை அமைத்து முறையாக விசாரணை நடந்து வருகிறது’ என்றார். அதேநேரம் முன்ஜாமீன் வழங்கக் கூடாது என அவர் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அப்ேபாது, திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சார்பில், மூத்த வக்கீல் வீரா கதிரவன், வக்கீல் ஜெகநாதன் ஆகியோர் அரசு தரப்பு வாதத்திற்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். நீதிபதியிடம் அவர்கள் கூறுகையில், ‘‘ரூ.5 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போலீசாரின் செயல்பாடுகள் அன்புநாதனுக்கு ஆதரவாக உள்ளன. அன்புநாதன் பல அமைச்சர்களுக்கு நெருக்கமாக இருப்பவர். அமைச்சர்களுக்கு பினாமியாக வலம் வருபவர். தேர்தல் பறக்கும் படை அதிகாரிதான் புகார் கொடுத்தவர். அன்புநாதனுக்கு சொந்தமான வாகனங்களில் அரசு ஆம்புலன்ஸ்போல பெயிண்ட் செய்து, வாசகங்களை எழுதப்பட்டுள்ளது.
அன்புநாதன் மூலம் 80 தொகுதிகளுக்கும் மேல் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்ய திட்டமிட்டுள்ளனர். இதற்காகவே பணத்தை பிரிக்கும் பணி அங்கு நடந்துள்ளது. அங்கிருந்து வாக்காளர் பட்டியல், பூத் சிலிப் உள்ளிட்டவையும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்மூலம் அவர்களது நோக்கம் தெளிவாகவே தெரிகிறது. எனவே, அவரை கைது செய்து விசாரிக்க வேண்டியது அவசியம். அப்போது பறிமுதல் செய்யப்பட்ட பணம் குறித்தும், இந்த பணம் எங்கிருந்து வந்தது. எங்கு கொண்டு செல்லப்பட உள்ளது. யாருக்கு சொந்தமானது என்பது குறித்த முழு விபரம் தெரியவரும். அவரை கைது செய்து விசாரணை செய்வதற்கு ஏதுவாக அவரது முன்ஜாமீன் மனுவை ஏற்றுக் கொள்ளக் கூடாது’’ என்று கூறினர்.
இதையடுத்து, நீதிபதி, ‘‘மனுதாரர் மீதான புகாரில் உள்நோக்கம் இருப்பதாக இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே, அவருக்கு நிபந்தனை முன்ஜாமீன் வழங்கப்படுகிறது. மறுஉத்தரவு வரும் வரை மனுதாரர் சம்பந்தப்பட்ட போலீசில் தினசரி காலை ஆஜராகி கையெழுத்திட வேண்டும்’’ என நிபந்தனை விதித்து உத்தரவிட்டார். மிக முக்கிய வழக்கில் சுலபமாக முன்ஜாமீன் கிடைத்த விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐகோர்ட் கிளை வக்கீல் சதீஷ்குமார் கூறுகையில், ‘‘சாதாரண வழக்கு முதல் இதைப் போன்ற முக்கிய வழக்குகள் வரையில் எந்தவொரு வழக்கிலும் குற்றவாளிக்கு சாதகமாகும் வகையில் அரசுத் தரப்பில் நீதிமன்றத்தில் செயல்பட மாட்டார்கள். பணம் பறிமுதல் செய்த வழக்கில், புகார் குறித்து சந்தேகம் தேவையில்லை. ஏனெனில் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இனிவரும் காலங்களில் பணம் பறிமுதல் தொடர்பான வழக்கில், தேர்தல் ஆணையத்தின் மூலம் நியமிக்கப்பட்ட வக்கீல்கள்தான் ஆஜராக வேண்டும். இல்லாவிட்டால் அன்புநாதன் போன்ற பலர் தப்பி விடுவர்,’’ என்றார்.
-அமுதவன்
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.