காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் கொல்லப்படுவதற்கு முன் தேசிய கொடி ஏற்றி வீர உரை ஆற்றிய அதிகாரி
காஷ்மீரில் சுதந்திர தினத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் கொல்லப்படுவதற்கு முன் மத்திய ஆயுதப்படை உயர் அதிகாரி தேசியக்கொடி ஏற்றி, வீர உரை ஆற்றி உள்ளார். அவரைப்பற்றிய உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாட்டின் சுதந்திர தினம் நேற்று முன்தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டுக்கொண்டிருந்தபோது, காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் நவ்ஹட்டா சவுக், கோஜ்வாரா சவுக், பேட்டா காலி, கானியர் சவுக் ஆகிய இடங்களில் பாதுகாப்பு படையினர் மீது பயங்கரவாதிகள் கையெறி குண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் நடத்தினர்.
இது குறித்த தகவல் அறிந்ததும் மத்திய ஆயுதப்படை போலீஸ் கமாண்டன்ட் பிரமோத் குமார் (வயது 44), தனது அந்தரங்க பாதுகாப்பு குழுவுடன் அங்கு விரைந்தார். பயங்கரவாதிகளுடன் அவர் சண்டையிட்டார். அந்த துப்பாக்கி சண்டையின்போது 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
ஆனால் அவர்களை எதிர்த்து வீரமுடன் சண்டையிட்டபோது, பயங்கரவாதிகளின் துப்பாக்கி குண்டு பிரமோத் குமாரின் கழுத்தின் மேல் பகுதியில் பாய்ந்தது. ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர், உடனடியாக அங்குள்ள ராணுவ ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லப்பட்டார்.
ஆனால் சிகிச்சை பலனின்றி மரணம் அடைந்தார்.
இந்த சம்பவம் நடப்பதற்கு சில நிமிடங்கள் முன்பாக ஸ்ரீநகர் முகாமில் அவர் தேசியக் கொடியேற்றி வைத்தார். அப்போது வீர உரை ஆற்றிய அவர், “இந்தியா 70-வது சுதந்திர தினத்தை கொண்டாடும்வேளையில், பாதுகாப்பு படைகளின் பொறுப்பு அதிகரித்து இருக்கிறது. காஷ்மீரில் பயங்கரவாதிகளையும், கல்வீச்சுக்களில் ஈடுபடுவோரையும் பாதுகாப்பு படையினர் தீரமுடன் எதிர்கொள்ள வேண்டும்” என்று பேசினார்.
பேசி முடித்து விடைபெறுவதற்கு முன் அவர் கூறிய வாசகங்கள், “இந்த நாள் ஒரு முக்கியமான நாள்” என்பதாகும். பாவம், இதை அவர் கூறும்போது, அந்த நாள், அவர் வாழ்வின் இறுதி நாள் என்பது அவருக்கு தெரிந்திருக்க நியாயம் இல்லை.
இதுபற்றி பிரமோத் குமாருடன் சேர்ந்து பணியாற்றிய மத்திய ஆயுதப்படை போலீஸ் மூத்த அதிகாரி ஒருவர் கருத்து தெரிவிக்கையில், “இந்த நாள் ஒரு முக்கியமான நாள் என்று அவர் ஏன் சொன்னார் என்பது எங்களுக்கு தெரியவில்லை. அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து அவருக்கு முன்னுணர்வு ஏற்பட்டிருக்க வேண்டும். அதனால் தான் அப்படி கூறி இருக்க வேண்டும். அவர் எந்த நேரத்திலும் பதற்றமின்றி அமைதியாக இருப்பார். ஆனால் துணிச்சலானவர்” என்றார்.
பிரமோத் குமார், மனைவி நேஹாவுடன் எப்போது தனது பணி பற்றியும், நாட்டின் பாதுகாப்பு குறித்தும் பேசினாலும் தவறாமல் சொல்லக்கூடிய வார்த்தைகள், “நாடுதான் எனக்கு தாய். என் தாய்நாட்டை காப்பதற்காக நான் எதையும் செய்வேன். நான் ஒரு நாள் சவுர்யா சக்கர விருது (போர்க்களம் அல்லாது நாட்டுக்காக அதிவீரச்செயல்களும், தன்னலமற்ற தியாகமும் செய்கிற பாதுகாப்பு படையினருக்கு வழங்குகிற உயர் விருது) வாங்குவதை நீ பார்க்கத்தான் போகிறாய்” என்பதாகும்.
இதை அவரது மனைவி நேஹா நெகிழ்ச்சியுடன் பகிர்ந்தபோது, “ நாட்டைப்பற்றி அவர் எப்போது பேசினாலும், தான் வித்தியாசமாக ஒன்றை செய்ய விரும்புவதாக கூறுவார். கடைசியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தொலைபேசியில் பேசினார். நமது 6 வயது மகள் ஆர்ணா நடனம் கற்கிறாள் என்றேன். அவர், அவள் நடன வீடியோவை பார்க்கிறேன் என்று சொன்னார். இப்போது அவர் எப்படி பார்ப்பார்? அவர் இல்லாமல் நான் என்ன செய்யப்போகிறேன் என்று தெரியவில்லை” என கூறி கண் கலங்கினார்.
-Amudhavan.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.