உலகில் எங்கு வேண்டுமானாலும் விளையாடி யாரை வேண்டுமானாலும் வெற்றிகொள்ளும் தகுதியுடன் இருக்கிறோம் – டோனி பேட்டி.
கடந்த 10 டி20 போட்டிகளில் இலங்கையுடன் ஏற்பட்ட புனே தோல்வி நீங்கலாக மீதி போட்டிகளை வென்றுள்ள இந்திய அணி எந்த நாட்டில் எந்த அணியை வேண்டுமானாலும் எதிர்கொள்ளத் தயாராக உள்ளதாக கேப்டன் தோனி பெருமிதமாக தெரிவித்தார்.
“இந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் இந்த இந்திய அணி எந்த ஒரு சூழ்நிலைகளிலும் விளையாட தயாரான அணியாகவே உள்ளது. நாம் 50 ஓவர் கிரிக்கெட் பற்றி இப்போது பேச வேண்டாம். இந்த டி20 அணியைக் கொண்டு உலகில் எங்கு வேண்டுமானாலும் எந்த அணியையும் எதிர்கொள்ளலாம்.
இப்போது நம்மிடையே 3 வேகப்பந்து வீச்சாளர்கள் 2 ஸ்பின்னர்கள், தேவைப்பட்டால் பகுதி நேர வீச்சாளர்கள் உள்ளனர். இதுதான் சரியான அணிச்சேர்க்கை. கூடுதல் ரன்களை விட்டுக் கொடுத்தாலும் நம்பர் 8 வரை உள்ள பேட்டிங்கினால் எதிரணியினர் எடுக்கும் கூடுதல் ரன்களையும் எடுத்து விடக்கூடியதாகவே அணி உள்ளது. எனவே எந்த ஒரு சூழ்நிலைமைகளிலும் ஆட இந்த அணி தயாராகிவிட்டது. இந்தியாவில ஆடினாலும் வெளிநாட்டில் ஆடினாலும் இந்த அணி ஒரு சமபலம் வாய்ந்த அணியாகவே உள்ளது” என்றார்.
வங்கதேச பத்திரிகை நிருபர் ஒருவர் இம்முறை மிக நீளமாக ஒரு கேள்வியை சுற்றி வளைத்து, தோனி வங்கதேசத்தில் ஆடுவது இதுதான் கடைசியா என்று கேள்வி எழுப்ப மீண்டும் தோனி, “நான் என்னைத் தாண்டிச் செல்ல விரும்பவில்லை. வங்கதேச அணி என்னை அடிக்கடி சந்திக்க வேண்டி வரும். ஆனால், இந்த ஒரு முறை எனது பதிலை விட கேள்வி மிக நீளமாக அமைந்து விட்டது” என்று தனக்கேயுரிய சூட்சமமான நகைச்சுவையை தோனி பிரயோகிக்க அறையில் இருந்த மற்ற ஊடகவியலாளர்கள் அனைவரும் அதற்காக சிரித்து மகிழ்ந்தனர்.
இந்த வடிவத்தில் அன்றைய தினத்தில் ஒரு பேட்ஸ்மென் அல்லது ஒரு பவுலருக்கு அவரது தினமாக அன்று அமைந்து விட்டால் அணிகளுக்கு இடையிலான வித்தியாசம் ஒன்றுமில்லாமல் போய் விடும். எனவே இது ஒரு நல்ல இறுதிப் போட்டியாகவே அமையும்.
இந்த டி20 கிரிக்கெட்டில் கடந்த போட்டிகளில் என்ன நடந்தது என்பது ஒரு கேள்வியே அல்ல, அந்த குறிப்பிட்ட நாளில் ஆடுவதைப் பொறுத்தே முடிவுகள் அமையும். பெரிய ஹிட்டர்களை விரைவில் பெவிலியன் அனுப்ப வேண்டும். பவுலர்களில் ஒருவருக்கு அன்றைய தினம் சிறப்பாக அமைவதை தடுக்க வேண்டும். நல்ல இறுதிப் போட்டிக்கான களம் அமைக்கப்பட்டுள்ளது” என்றார் தோனி.
-ரயன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.