திருப்பதியைப் போல் அய்யப்பன் கோவில் நடையையும் தினசரி திறக்க வேண்டும் – கேரள முதல்வர் வலியுறுத்தல் ; ‘அப்படித் திறக்க முடியாது’- தேவசம் போர்டு தலைவர் பதிலடி.
கேரளாவில் உள்ள பிரசித்திப் பெற்ற சபரிமலை அய்யப்பன் கோவிலில் மண்டல பூஜை விழா தொடங்க இன்னும் 2 மாதங்களே உள்ளன.
சபரிமலையில் பக்தர்களுக்கு செய்யப்பட வேண்டிய வசதிகள் மற்றும் ஏற்பாடுகள் குறித்து முதல்- மந்திரி பினராயி விஜயன் தலைமையில் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
இதனை முதல்-மந்திரி பினராயி விஜயன் சபரிமலை சன்னிதான கூட்ட அரங்கில் நடத்த ஏற்பாடு செய்தார். இதற்காக நேற்று காலை அவர், திருவனந்தபுரத்தில் இருந்து பம்பைக்கு சென்றார்.
அங்கு இருமுடி கட்டி சன்னிதானம் செல்ல திட்டமிட்டார். கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சியில் முதல்- மந்திரியாக இருந்த யாரும் இதுவரை இருமுடி கட்டி சன்னிதானம் சென்றதில்லை.
அந்த பழக்கத்தை பினராயி விஜயன் மாற்ற முன் வந்தார். ஆனால் நேற்று அவர், பம்பை சென்றடைந்ததும் பலத்த மழை கொட்டியது. இதனால் அவர் திட்டமிட்டப்படி சன்னிதானம் செல்ல முடியவில்லை.
மழை காரணமாக பம்பையில் உள்ள கணபதி கோவிலில் ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் அறநிலையத்துறை மந்திரி கடகம்பள்ளி சுரேந்திரன், திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசியதாவது:-
சபரிமலை கோவிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு பம்பை முதல் சன்னிதானம் வரை தொடர்ச்சியாக ஓய்வறைகள் கட்ட வேண்டும். குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
அய்யப்பனை தரிசிக்க வரும் பக்தர்கள் கூட்டத்தை கட்டுப்படுத்த திருப்பதி கோவிலை போல இங்கும் வி.ஐ.பி. தரிசனத்திற்கு கட்டணம் வசூலிக்க வேண்டும். கோவில் நடையை தினமும் திறக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
அவர் இவ்வாறு கூறியதும் திருவிதாங்கூர் தேவசம் போர்டு தலைவர் பிரயார் கோபாலகிருஷ்ணன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
சபரிமலை அய்யப்பன் ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் பார்க்காதவர். அவரை தரிசிக்க வி.ஐ.பி. வரிசையும், அதற்காக கட்டணமும் வசூலிக்க முடியாது.
மேலும் அய்யப்பன் பிரம்மச்சாரி விரதம் கடை பிடிப்பவர். மாதந்தோறும் தியானத்தில் இருப்பவர். அவரது கோவிலை தினசரி திறப்பது என்பது ஆகம விதிக்கு முரணானது.
எனவே கோவில் நடையை தினமும் திறப்பதை ஒப்புக்கொள்ள முடியாது என்று மறுப்பு தெரிவித்தார்.
முதல்-மந்திரி பினராய் விஜயன் பேசியதும் அவருக்கு அந்த கூட்டத்திலேயே மறுப்பு தெரிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. என்றாலும் பிரயார் கோபாலகிருஷ்ணனின் கருத்தை ஏற்பதாகவும், தன்னுடைய கருத்தை பரிசீலிக்க வேண்டுமென்றும் பினராயி விஜயன் தெரிவித்தார். விரைவில் இருமுடி கட்டி மீண்டும் சபரிமலை சன்னிதானம் வருவேன் என்றும் கூறினார்.
-அமுதவன்.
If you like to publish news or your story on our website, please email to editor 'at' deccanabroad.com.